* சென்னையில் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 25; இயங்குவதோ –10 தான்
* மொத்த ஊழியர்கள் – 4 ஆயிரம்; வேலை பார்ப்பதோ – 400 பேர்
‘கொரோனா ஊரடங்கால்…’ ஊரே முடங்கியதால்…
‘‘வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்றோம்;
சரவணபவன் ஓட்டல்களில் காய்கறி–பழங்கள் விற்பனை செய்கிறோம்.’’’
‘‘தரம்; நியாயமான விலை; பொது மக்கள் மகழ்ச்சி; பழைய பிசினஸ் மீண்டும் திரும்ப 10 மாதம் பிடிக்கும்’’
உரிமையாளரின் தனிச் செயலர் தாமோதரன் பேட்டி
சென்னை, மே. 20–
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் 3வது வாரத்திலிருந்து இந்தியா பூராவும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாலாவது கட்டமாக ஒரு சில தளர்வுகளுடன் இம்மாதம் 31–ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பள்ளிகள்– கல்லூரிகள் – அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள்– தொழிறாசலைகள் ஜவுளி– நகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு ஒரு சில தளர்வுகளுடன் அரசு அலுவலகங்களும், தனித்தனி தடைகளும் மெல்ல மெல்லத் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஓட்டல்கள் எல்லாம் மூடப்பட்டு உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லாமல் ஆன்லைன் ஆர்டர்– பார்சல் விற்பனை மட்டுமே நடந்து வரும் சூழ்நிலையில், நகரில் மிகவும் பரபலமான சரவண பவன் ஓட்டல் (அமரர் ராஜகோபாலன் அண்ணாச்சி நிறுவியது), பார்சல் உணவை அளித்து வருவதோடு, பொது மக்களுக்கு காய்கறி– பழங்கயைும் 2 மாத காலமாக விற்று வருகிறது.
‘ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டோம். பஸ் – ஆட்டோ போக்குவரத்து இல்லை, கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தைகளே– சில்லரைக் கடைகளுக்கோ போய் வாங்க முடியவில்லை. இந்நிலையில் எங்களுக்கு நீங்கள் காய்கறி– பழங்கள் விற்பனை செய்தால் என்ன…?’ என்று நிரந்தர வாடிக்கையாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றோம்; அதன்படியே நகரில்– புறநகர்ப் பகுதிகளில் திறந்திருக்கும் எங்கள் ஓட்டல்களில் மார்ச் 4வது வாரத்திலிருந்து காய்கறி–பழங்களை தற்காலிகமாக விற்பனை செய்து வருகிறோம் என்று ஓட்டல் உரிமையாளரின் தனிச் செயலாளர் தாமோதரன் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக தாமோதரன் மக்கள் குரலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
‘‘சென்னை நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் சரவண பவனுக்கு மொத்தம் 25 கிளைகள் உள்ளன. உயிர்கொல்லி ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருக்கும் நிலையில் மத்திய –மாநில அரசுகளின் உத்தரவை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு’ உள்ளது.
அது இப்போது 4வது கட்டத்தில் ஒரு சில தளர்வுகளுடன் தொடர்ந்து அமுலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகமெங்கும் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன பொதுமக்களுக்கு பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. இது, மற்ற ஓட்டல்களைக் காட்டிலும் சரவணா பவன் ஓட்டல்களை மிகவும் மோசமாக பாதித்திருக்கிறது.
எங்கள் குரூப் ஓட்டல்களில் சுமார் 4,000 பணியாளர்கள் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்த்து வருகிறார்கள். ஊரடங்கு அமுல் படுத்துவதற்கு முதல்நாள் அவரவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு போய்விட்ட நிலையில், சென்னையில் தங்கியிருப்பவர்கள், ஓட்டல் கட்டிடத்தில் தங்கியிருப்பவர்கள் ஆகிய இரண்டு பிரிவினரை மட்டுமே வைத்துக்கொண்டு, அதுவும் குறைந்த எண்ணிக்கையில், இருப்பவர்களை சுழற்சிமுறையில் வைத்துக்கொண்டு தினசரி ஓட்டலை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
ஓட்டலுக்கு தனியாகவும், குடும்பத்தோடும், நண்பர்களோடும் வந்து சாப்பிட்டவர்கள் அடியோடு நின்று போனதால் தொழில் இப்போது முடங்கிப் போனது. நேரில் வருபவர்களுக்கும் போனில் ஆன் லைனில் ஆர்டர் தருபவர்களுக்கும், டிபன் –சாப்பாடு மட்டுமே கொடுப்பதற்காக நாங்கள் இரவு 9 மணி வரை பிறந்து இருக்கிறோம். தினசரி காலை ஆறு மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் ஓட்டல்களின் வருமானம் பெருத்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவல் செய்தியை தினசரி பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் பார்க்கும் பொதுமக்களில் பெரும்பாலோனோர் ஓட்டல்களில் சாப்பாடு வாங்குவதையும் அடியோடு நிறுத்தி இருக்கிறார்கள். (துணையின்றி தனியாக இருப்பவர்கள், முதியோர்கள் மட்டுமே வாங்கி சாப்பிடும் நிலை இப்போது )
இத்தகையதோர் சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சிலர் எங்கள் நிர்வாகத்தை அணுகினார்கள். பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக விலகல் விதிக்கு ஏற்ப இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்… என்று அடுத்தடுத்து விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கேட்டு பயந்த வாடிக்கையாளர்களின் சிலர், ‘‘நீங்களே காய்கறி பழங்களின் விற்பனையையும் பொதுமக்களுக்காக துவக்கினால் என்ன? எங்களின் சிரமம் குறையுமே…’’ என்று ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அதை நிர்வாகம் பரிசீலித்து உடனே ஏற்றது. அப்படி உருவானதுதான் எங்கள் ஓட்டல் கிளைகளில் காய்கறி –பழங்கள் விற்பனை.
வெளி மார்க்கெட்டை விட விலை அதிகம் இருக்கும் சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படி இல்லை, மலிவு விலை தான். தாமும் உள்ளது என்று அவர்கள் உணர்ந்தார்கள். காய்கறி, பழங்கள் குறிப்பிட்ட அளவை மட்டும் வைத்துக் கொண்டு பத்து கிளைகளிலும் நாங்கள் வியாபாரத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
காய்கறி பழங்கள்… வெளிமார்க்கெட்டில் சில்லரை விலை என்னவோ அதுவேதான் இங்கும் என்று நம்பிக்கையான ஒரு தகவல் அவர்களுக்கு தெரியவந்ததும் வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தார்கள். தினசரி காய்கறி பழங்கள் விற்பனை நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது.
சம்பளத்தில் பிடித்தமில்லை
இப்பொழுது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அவர்கள் வாங்குகிற சம்பளத்தில் பிடித்தம் இல்லாமல் கொடுத்திருக்கிறோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தினத்துக்கு முதல்நாள் சென்னையை காலி செய்து கொண்டு சொந்த ஊருக்கு
போனவர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறோம். இருந்தும் வேலைக்கு வராமல் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கும் அந்தப் பணியாளர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது, அதை எதைக்கொண்டு தீர்மானிப்பது என்பதை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் பேசி முடிவு எடுக்க இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவை நிர்ணயித்துக்கொண்டு கொண்டு அதற்கு ஏற்ப உணவு தயாரிக்கிறோம். சமைப்பது வீணாகிவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக திட்டமிட்டு சமைக்கிறோம்.
முன்பு மொத்த காய்கறி விற்பனை சந்தையில் (கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து) காய்கறி பழங்களை வாங்கி வந்தோம். ஆனால் உயிர்கொல்லி வைரஸ் பரவிய சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்த விற்பனைக்கூடம் திருமிழிசை நகருக்கு தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் நாங்கள் அங்கிருந்து காய்கறி பழங்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.
வருமானம் மோசமான பாதிப்பு
மற்ற தொழில்களைப் போலவே ஓட்டல் உணவு துறையும் மோசமான விளைவை சந்தித்திருக்கிறது. எங்களைப்போன்ற பாரம்பரியமிக்க ஓட்டல்களில் வருமானம் மிகவும் மோசமான அளவுக்கு பாதித்திருக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு நாங்கள் திரும்பி பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி கட்டுவதற்கு குறைந்தது 10 மாதங்களாவது ஆகும். இப்படி ஒரு திடீர் சோதனை நெருக்கடி உலக அளவில் ஏற்பட்டு சர்வதேச பொருளாதாரத்தையே அடியோடு புரட்டிப் போட்டு இருப்பது யாரும் எதிர் பார்த்திராத ஒன்று. வரலாறும் காணாதது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டல்களை திறந்து வைத்து இருந்தாலும்…… இனி வரும் நாட்களில் பழைய நிலைமைக்கு எப்படி திரும்புவோம் என்பது பயமுறுத்தும் ஒரு கேள்வி குறியாக, சவால்விடுவதாக இருந்து கொண்டிருக்கிறது.
அரசு ஆணைகளின் படி மீண்டும் பழைய ஓட்டல்களை திறந்தாலும்… உயிர்கொல்லி கொரோனா தாக்கமும் பயமும் இன்னும் இருந்துகொண்டிருக்கும். அதனால் உடனடியாக பழைய வாடிக்கையாளர்களின் கூட்டத்தை எதிர்பார்ப்பது என்பதும் சற்று சிரமமாகத்தான் இருக்கும். இருந்தாலும் இது காலப்போக்கில் மாறும் என்று நம்பிக்கை இருக்கிறது.
இருந்தாலும்… செய்யும் தொழில் மீது இருக்கும் பக்தி, ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இனி நடப்பது நல்லதாகவே இருக்கும் என்ற அழுத்ததிருத்தமான நம்பிக்கையில் நாளும் நாட்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறோம்.’’
இவ்வாறு அவர் கூறினார்.