புதுடில்லி: ‘கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் உடலில், வைரஸ் உயிர்வாழும் நேரம், படிப்படியாக குறையும் என, அறிவியல் கூறினாலும், அந்த உடலில் இருந்து, வைரஸ் முழுதுமாக நீங்குவதற்கான கால அவகாசத்தை கணிக்க முடியாது’ என, ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலில், எத்தனை மணி நேரத்திற்கு, வைரஸ் உயிர் வாழும் என்ற கேள்விக்கு, ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை, கையாளுவதற்கு, பிரத்யேக மருத்துவ ஊழியர்களை, மருத்துவமனைகள் நியமிக்க வேண்டும். அந்த உடலை, வேறு இடத்திற்கு எடுத்து செல்ல, தனியாக ஊழியர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரிய நபருக்கு, விபத்து, தற்கொலை அல்லது கொலை போன்ற அகால மரணம் நேர்ந்தால், போலீசின் ஒத்துழைப்புடன், அவரது உடலை அறுக்காமல் பரிசோதனை செய்து, உடற்கூறாய்வு சான்று வழங்கப்பட வேண்டும். உடற்கூறாய்வு செய்வதன் மூலம், தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த உடலை, முழுதுமாக கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின் உடற்கூறாய்வு செய்வதும், பாதுகாப்பானது அல்ல.
உயிரிழந்தவரின் உடலில், கொரோனா வைரஸ், உயிர்வாழும் நேரம் படிப்படியாக குறையும் என அறிவியல் கூறினாலும், அந்த உடல் முழுதுமாக தொற்று அற்றதாக மாற, எத்தனை மணி நேரமாகும் என்பதை, கணித்து கூற முடியாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைக்கு காச நோய் கருவி!
கொரோனா தொற்று பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக, காச நோய் தொற்றை உறுதி செய்ய பயன்படுத்தும், ‘ட்ரூநேட்’ பரிசோதனை கருவியை பயன்படுத்த, கடந்த ஏப்ரல், 10ல், ஐ.சி.எம்.ஆர்., அனுமதி அளித்தது. ஆனால், இதை ஒரு முதற்கட்ட ஆய்வாக கருதுமாறு அறிவுறுத்தியது.
தற்போது, இந்த பரிசோதனையில், தொற்று இல்லை என உறுதியானால், அதை ‘நெகட்டிவ்’ என எடுத்துக் கொள்ளவும், தொற்று இருப்பது உறுதியானால், மற்றொரு பரிசோதனை செய்து, அதிலும் தொற்று உறுதியானால் மட்டுமே, ‘பாசிட்டிவ்’ என பதிவு செய்யுமாறும் தெரிவித்துள்ளது.