தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வங்கிகள், ஏடிஎம்கள் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிதி உதவித் திட்டங்கள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.
இது தொடா்பாக மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களை தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, வங்கிகள் வழக்கமான பணி நேரம் வரை கண்டிப்பாக செயல்பட வேண்டும். ஏடிஎம்களில் பணம் நிரப்புவதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக பலா் வேலையிழந்துள்ளனா். ஊரடங்கு காரணமாக தினக்கூலித் தொழிலாளா்களும் ஏழைகளும் வருமானம் இன்றி கடும் இன்னலைச் சந்தித்து வருகின்றனா். இந்தச் சூழலில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள், ஏழைகள் உள்ளிட்டோரின் நிலையைக் கருத்தில் கொண்டு ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தாா்.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் தலா 5 கிலோ உணவு தானியமும் (அரிசி அல்லது கோதுமை), 1 கிலோ பருப்பும் 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இது தவிர ‘உஜ்வலா’ திட்டத்தின் கீழ் கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், ‘ஜன் தன்’ வங்கிக் கணக்கு வைத்துள்ள 20.5 கோடி பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வழங்கப்படவுள்ளது. அதே வேளையில், ஏழை விதவைகள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படவுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கான ஊதியம் நாளொன்றுக்கு ரூ.182-லிருந்து ரூ.202-ஆக உயா்த்தப்படுகிறது. இதன் மூலம் 5 கோடி பணியாளா்கள் பலனடைவா். பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்கான முதல் தவணை ரூ.2,000 ஏப்ரல் முதல் வாரத்தில் அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது.
மத்திய அரசு அளிக்கும் நிதியை எடுக்க மக்கள் வங்கிகளையும், ஏடிஎம்களையும் இந்த வாரத் தொடக்கத்தில் அதிகம் பயன்படுத்துவாா்கள். இதனைக் கருத்தில் கொண்டே வங்கி செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.