பொதுத்தேர்வின் போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவசமாக முக கவசம் அரசு அறிவிப்பு

Spread the love

பொதுத்தேர்வின் போது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்படும் என்றும், சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதி செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தும் பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க, ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் சமூக இடைவெளியோடு அமர வைக்கப்படுவார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு நாளன்று பயன்படுத்தும் பொருட்டு சுமார் 46 லட்சத்து 37 ஆயிரம் முக கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். தேர்வு மையங்கள் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் காலை, மாலை சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்படும்.

* தேர்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பின், அத்தேர்வு மையங் களுக்கு மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பயணம் செய்துவரும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு மட்டும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதன்மை தேர்வு மையங்களிலேயே தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் அவர்களின் அடையாள அட்டை மற்றும் தேர்விற்கான நுழைவுச் சீட்டின் அடிப்படையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும் மற்றும் உள்ளே வரவும் அனுமதிக்கப்படுவர்.

* சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்றுவர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி உறுதி செய்யப்படும்.

* விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஒரு அறையில் சமூக இடைவெளியை பின்பற்றி 8 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மையத்திற்கு வருகை புரியும்போது தங்களது கைகளை சோப்பு, கிருமிநாசினி திரவம்கொண்டு சுத்தம் செய்வதற்கும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக 5 தொடர்பு எண்கள் உதவி எண்களாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டும், மாணவர்களின் தேர்வு நுழைவுச்சீட்டில் அச்சடித்தும் வழங்கப்படும். இதன் வாயிலாக மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சந்தேகங்களை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

* குறிப்பிட்ட தேதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்றுவர தேவையின் அடிப்படையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போதிய அரசு பஸ் மற்றும் தனியார் பள்ளி வாகன வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தேர்வு எழுதும் பொருட்டு சொந்த ஊருக்கு திரும்பவரும் மாணவர்கள் அடையாள அட்டை அல்லது தேர்வு அனுமதிச்சீட்டினை காண்பிக்கும்பட்சத்தில் அந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், பாதுகாவலர்கள் தமிழ்நாடு ஆன்லைன் அனுமதி (இ-பாஸ்) இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

* இந்த விலக்கானது தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

* தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் புதியதாக தேர்வு நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) கணினி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். மேலும் மாணவர்கள் இதனை பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட இரு முறைகளிலும் நுழைவுச்சீட்டு பெற இயலாதவர்களுக்கு தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளியூரில் இருந்துவந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச்சீட்டு பெற அழைக்காமல், அவர்களது வீடுகளுக்குச்சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* மாணவர்கள் வெளியூர் சென்றுள்ள இடம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக இருந்தால், அப்பகுதியில் இருந்து தனி வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்ப சிறப்பு அனுமதி வழங்கப்படும். எனினும், அத்தகைய மாணவர்களும், பெற்றோர்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page