சென்னை : ‘தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில், இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஒரு வாரத்துக்கும் மேலாக வங்க கடலில் சுழன்ற, ‘அம்பான்’ புயல், நேற்று முன்தினம், மேற்கு வங்கம் வழியே கரையை கடந்தது. மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. வங்கதேச நாட்டிலும் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால், தமிழகம் உள்ளிட்ட, தென் மாநிலங்களில் நிலவிய வெப்பம் நேற்றும் நீடித்தது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், மாலையில் லேசான கடற்காற்று வீசியதால், வெப்பநிலை சற்று குறைந்தது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு:தமிழகத்தின் வடமாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, வடக்கு உள்கர்நாடகா, தெலுங்கானா என, ஐந்து மாநிலங்களில், இன்றும், நாளையும், காலை முதல் மாலை வரை அனல் காற்று வீசும். சென்னை, வேலுார், திருத்தணி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில், இன்று, 42 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் பதிவாகலாம்.
வெப்பச் சலனம் மற்றும் கேரளாவை ஒட்டிய பகுதியில், மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய கேரளா கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.எனவே, இன்று முதல் நான்கு நாட்களுக்கு, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, வானிலை மையம் அறிவித்துள்ளது.
13 இடங்களில், 100 டிகிரி:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 13 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸை தாண்டி, நேற்று வெயில் கொளுத்தியது. சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில், 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது
* சென்னை நுங்கம்பாக்கம், மதுரை, திருச்சி, கரூர் பரமத்தி, வேலுார், 41; தர்மபுரி, கடலுார், 40; புதுச்சேரி, சேலம், நாமக்கல், 39; நாகை, 38; பாளையங்கோட்டை, 37; கோவை, 36; துாத்துக்குடி, 35; கன்னியாகுமரி, 30; கொடைக்கானல்,21; ஊட்டியில், 27 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.