புதுடில்லி: பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே 22) ஆலோசனை நடத்த உள்ளார். இதில், வங்கிகள் வழங்கி வரும் கடன்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த வாரம் தொடர்ந்து 5 நாட்களாக கடனுதவி, நிதியுதவி மற்றும் சீர்திருத்த திட்டங்களை அறிவித்தார்.
இந்நிலையில், பொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிர்மலா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிக்கலின்றி நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிர்மலா அறிவித்த திட்டங்களில் பெரும்பாலும், வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்.
வங்கி கடன்களுக்கான இ.எம்.ஐ., 3 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.