அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையை ஏற்க மாட்டோம்: சீனா

Spread the love

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ள நிலையில், அந்த சட்ட நடவடிக்கையை ஏற்க மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே உலுக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 52 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 16.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ், சீன ஆய்வகத்தில் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு வேண்டுமென்றே பரவ விட்டதாகவும், சீனா நினைத்திருந்தால் மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்திருக்கலாம் எனவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இது தொடர்பாக சீனா மீது விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், கொரோனா வைரசை கையாண்ட விதத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடக்கவில்லை, உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும், சீனாவிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்காக சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாங் யேசூயி செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகில் கொரோனா வைரஸ் பரவியதற்கும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதற்கும் சீனா தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை மீறி சர்வதேச சட்டங்களை மீறி நடப்பதாகும். அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதனை கடுமையாக எதிர்ப்போம். மேலும், அதற்கு சீனா தரப்பில் கடும் பதிலடி நடவடிக்கைகள் இருக்கும்.

அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்திவிட்டு, தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். சொந்த பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும்,இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது. கொரோனா வைரசை பொறுத்தவரை, சீனா சிறப்பாக செயல்பட்டு தொற்றை கட்டுப்படுத்தியது, பல தியாகங்களை செய்து அதனை வென்றுள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று ஏற்றப்பட்டதில் இருந்து உலகிற்கு வெளிப்படைத்தன்மையுடனே அனைத்து தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளோம். உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் கூறினோம். உலக நாடுகளுக்கும் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தோம். சீன ஆய்வகத்தில் இருந்து பரவியதாக கூறும் குற்றச்சாட்டையும் ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம் என்பதால், அறிவியலாளர்கள், மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து இதனை முடிவு செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page