அடுத்த மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை

Spread the love

அடுத்த மாதம் இந்தியா, பாகிஸ்தானுக்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க்,

உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும்.

தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன.

அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 10 நாடுகளில் வெட்டுக்கிளி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட நாடுகளுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அதற்கான நிபுணர்களையும், மருந்துகளையும் விமானம் மூலம் அனுப்பி, வானில் இருந்து மருந்து தெளித்தல் ஆகியவை எங்கள் பணிகள் ஆகும். இதற்காக உலக நாடுகள் 15 கோடியே 30 லட்சம் டாலர் நிதி ஒதுக்க வேண்டும்.

அடுத்த மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் இந்திய பெருங்கடலை கடந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் படையெடுக்கும். அத்துடன், வடக்கு சோமாலியாவில் இருந்து வேறு சில பூச்சி இனங்களும் வரக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவில் அடுத்த 6 மாதங்களில் இரண்டரை கோடி பேர் உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பை கட்டுப்படுத்த இணைந்து செயல்படலாம் என்று பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையே, பாகிஸ்தானை ஒட்டிய ராஜஸ்தான் மாநில மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், அங்கு ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிமருந்து தெளிப்பதற்கான அவசர திட்டத்தை அம்மாநில அரசு தீட்டி உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில வேளாண்மைத்துறை மந்திரி லால்சந்த் கடாரியா ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page