சென்னை
முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். ”தி.மு.க.,வில் ஜாதிக்கு, ஒரு நீதி பார்க்கின்றனர்,” என, குற்றம் சாட்டினார்.
தி.மு.க.,வில், மாநில துணை பொதுச்செயலராக இருந்த, வி.பி.துரைசாமி, சில தினங்களுக்கு முன்,தமிழக பா.ஜ., அலுவலகம் சென்று, அக்கட்சியின் மாநில தலைவர்முருகனை சந்தித்தார். இதனால், கோபம் அடைந்த, தி.மு.க., தலைமை, அவரை கட்சி பதவியிலிருந்து நீக்கியது. அதைத் தொடர்ந்து அவர், தி.மு.க.,வில் இருந்து விலகினார்.சென்னை, தி.நகரில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், நேற்று அக்கட்சி தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தார் துரைசாமி.
அவரது மகன் பிரேம்குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்த, அவரது மைத்துனர் நடேசன் ஆகியோரும், பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை, முருகன் வழங்கினார். இணைப்பு நிகழ்ச்சிக்கு பின், நிருபர்களிடம், வி.பி.துரைசாமி கூறியதாவது: தி.மு.க.,வில், எதையும் எதிர்பார்க்காமல், நீண்ட காலம் உழைத்தவன். சில ஆண்டுகளாக, அந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ, அதிலிருந்து மாறிச் செல்கிறது.பா.ஜ., இயக்கம், முன்னேறிய மக்களுக்கு மட்டுமானது எனக் கூறி வந்தனர்; அது தவறு.
ஹிந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்குமான கட்சி என்பதை உணர்ந்ததால், இதில் இணைந்துஉள்ளேன்.வளர்ந்த சமுதாயத்திற்கு மட்டும், சொந்தமான இயக்கம் எனக் கூறப்பட்ட, பா.ஜ., தலைவராக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை நியமித்துள்ளனர். இந்த சமுதாயத்தை கைதுாக்கி விட வேண்டும் என்ற எண்ணம், வேறு யாருக்கும் வரவில்லை. பா.ஜ., தலைவராக, அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரை நியமித்தது பெருமைக்குரியது.தி.மு.க.,வில் இருக்கும் ஒருவர், அ.தி.மு.க., அமைச்சரை சந்திக்கலாம்.
நான் முருகனை சந்தித்தது, பாவ செயல் என்றால், ஜாதிக்கு ஒரு நீதியா; ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, தி.மு.க., துவக்கப்பட்டது; அதில் இருந்து பிறழ்ந்து விட்டது. ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் இருந்திருந்தால், முருகனுக்கு தலைவர் பதவி கொடுத்ததற்கு, வீடு தேடி வந்து வாழ்த்தியிருப்பர்.பா.ஜ.,வால் மட்டுமே, இந்தியாவை காப்பாற்ற முடியும். தி.மு.க.,வில், ஏராளமானோர் மனக் குமுறலுடன் உள்ளனர். என்னை தொடர்ந்து, பலர் பா.ஜ.,விற்கு வருவர். இவ்வாறு, அவர் கூறினார்
.