சென்னை:
தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சென்னை மாவட்டம் தவிர்த்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களில், சலூன், அழகு நிலையங்களை இன்று(மே24) முதல் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, அரசு பல்வேறு தளர்வுகளை, அறிவித்து வருகிறது. ஊரகப் பகுதிகளில், மே, 19 முதல், முடி திருத்தும் நிலையங்களான சலுான்கள் இயங்க, முதல்வர் அனுமதி அளித்தார். அதேபோல, நகரங்களிலும் திறக்க அனுமதிக்க வேண்டும் என, முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள், இன்று முதல் இயங்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தினமும் காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள, சலுான்கள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களையும், பணியமர்த்தக் கூடாது.
சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, ஊரகப் பகுதிகளை தவிர, தமிழகத்தின் அனைத்து ஊரகப் பகுதிகளிலும், இன்று முதல் அழகு நிலையங்கள் இயங்கவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலுான்கள் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பணியாளர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர்களுக்கோ, காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களை அனுமதிக்கக் கூடாது.வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முகக் கவசங்கள் அணிவதையும், உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர், ஒரு நாளைக்கு, ஐந்து முறை, கிருமி நாசினியை தெளிக்க வேண்டும்.வாடிக்கையாளர்களும், பணியாளர்களும், அடிக்கடி சோப்பால் கை கழுவுவதை, உறுதி செய்ய வேண்டும். ‘ஏசி’ இருந்தால், அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது. இவ்வாறு, முதல்வர் அறிவித்துள்ளார்.