ம.பி.,யில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோரை களமிறக்குது

Spread the love

புதுடில்லி:
மத்திய பிரதேசத்தில், 24 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ.,வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்., கட்சியும் முனைப்பு காட்டி வருகின்றன. காங்., கட்சி, பிரசாந்த் கிஷோருக்கு பிரசாரப் பொறுப்பு அளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை விட சற்று கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், ஆட்சி அமைத்தது. கமல்நாத், முதல்வரானார். இந்தாண்டு துவக்கத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, 22 எம்.எல்,ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, மார்ச் இறுதியில், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றது.

இந்நிலையில், பா.ஜ., – காங்., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு, எம்.எல்.ஏ.,க்கள் இறந்ததால், இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. இத்துடன், காங்., – எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்த, 22 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த, 24 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தபின், இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

பா.ஜ., மும்முரம்:
தற்போது, காங்கிரசை விட, பா.ஜ.,வுக்கு, 15 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர். இடைத்தேர்தலில், 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை காங்கிரஸ் வென்றால், ஆட்சி, மீண்டும் காங்கிரஸ் வசம் போய் விடும். எனவே மாநில பா.ஜ., தலைவர்கள் தேர்தல் பணிகளில் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனா மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு, முழு வீச்சில் நிவராண பணிகளை செய்து வருகின்றனர். இதை, ஓட்டாக மாற்றும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

காங்.,க்கு பிரசாந்த் கிஷோர்:

அதே சமயம் காங்., கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வியூகம் அமைத்து வருகிறது. அந்த வகையில், 2018 சட்டசபை தேர்தலில் பிரசாரப்பணி செய்த தேர்தல் நிபுணர், பிரசாந்த் கிஷோரையே, காங்., மீண்டும் அமர்த்தி உள்ளது. இதனையடுத்து அவர், குவாலியரில், முதல் தேர்தல் அலுவலகம் அமைத்து பணியை துவக்கி உள்ளார். அவரின் ஆலோசனையின் பேரில், வேட்பாளர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சில தினங்களுக்கு முன், காங்., இடைக்கால தலைவர் சோனியா, ம.பி.,யில் 11 மாவட்டங்களில், கட்சி நிர்வாகிகளை புதிதாக தேர்வு செய்தார். இந்த நடவடிக்கையும், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page