நாடு முழுதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் வேளையில், ஊரடங்கு முடிவிற்குப் பின், பல்வேறு துறைகளிலும், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகும் என, அஞ்சப்படுகிறது.
சொந்த ஊர் சென்றுள்ளவர்கள் எப்போது திரும்புவார்கள், அவர்களை திரும்ப அழைக்க, அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்பது போன்ற பல கேள்விகளும், எதிர்பார்ப்புகளும், எழ துவங்கி உள்ளன.கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13 கோடியே 90 லட்சம் தொழிலாளர்கள், மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்ந்துள்ளனர் என, தகவல் வெளியிடப்பட்டது.இவர்கள், தெருவோர கடைகள், கட்டுமானப் பணிகள், ஜவுளி ஏற்றுமதி, விவசாயம், மால்கள், சுமை துாக்கும் தொழில், சமையல், ஓட்டல் சிப்பந்திகள், அழகு நிலையங்கள் என, பல துறைகளிலும் உள்ளனர்.
நடைபயணம்
தற்போது, ‘கொரோனா’ பரவல் காரணமாக, வேலை இழந்து, முதலாளிகளால் கைவிடப்பட்டு, அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத நிலையில், மூட்டை முடிச்சுகளுடன், குடும்பம் குடும்பமாக, சொந்த ஊர்களை நோக்கி, ரயில்களிலும், பஸ்களிலும், நடைபயணமாகவும், தொழிலாளர்கள் ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் ஊர் போய் சேர்ந்த பின், கொரோனா களேபரங்கள் முடிவுக்கு வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகு, இவர்கள் பணியாற்றிய இடங்களை யார் நிரப்ப போகிறார்கள்.அவர்களின் பணிகளை செய்வதற்கு, எங்கிருந்து ஆட்கள் கிடைக்கப் போகின்றனர்; உள்ளிட்ட பல கேள்விகள் எழத் துவங்கி உள்ளன. ‘நம் பொருளாதாரத்தை மீண்டும் துவங்கும் போது, தொழிலாளர் பற்றாக்குறையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது குறித்து, அரசு சிந்தித்து வருகிறது’ என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.’இந்த விவகாரத்தில், ஊரடங்குக்கு முந்தைய நிலையை எட்ட, குறைந்தது ஒன்றில் இருந்து, இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்’ என, நிபுணர்கள் கூறுகின்றனர். இனி, தொழிலாளர்கள், வேலை வாய்ப்புக்காக, தங்கள் ஊர்களை விட்டு, பல 100 கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு செல்லாமல், அருகில் உள்ள நகரங்களில், வேலை வாய்ப்புகளை தேடிக் கொள்ளக்கூடும்.இந்த விவகாரத்தில், கேரள அரசு, சமயோசிதமாக செயல்பட்டதாக, தொழில்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.
கேரளாவில், நான்கு லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தங்கும் வசதி, அவர்கள் மாநில உணவுகள், ‘மொபைல் போன் ரீசார்ஜ்’ உள்ளிட்ட வசதிகளை, கேரள அரசு செய்து கொடுத்து, அவர்களை தங்கள் மாநிலத்திலேயே, பாதுகாப்புடன் வைத்திருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.
குடிபெயர்ந்த தொழிலாளர்களை, மீண்டும் பணிக்கு திரும்பச் செய்ய, அரசு அவர்களுக்கு பல சலுகைளை அளிக்க வேண்டும் என, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், தலைமையிலான அமைச்சர்கள் குழு, பிரதமர் நரேந்திர மோடியிடம், சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.
‘ஆயுஷ்மான் பாரத்’
தொழிலாளர் நலனுக்காக, தேசிய வேலைவாய்ப்பு திட்டம் வகுப்பது, குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான நல நிதியம் உருவாக்குவது, அவர்களை ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இணைப்பது உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கி, அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப ஊக்குவிக்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது
.மேலும், கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியாளர்கள் சட்டத்தில் பதிவு பெற தகுதி இருந்தும், இன்னும் பதிவு பெற்றிடாத இரண்டு கோடி தொழிலாளர்களை அதில் இணைப்பது, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தில் தள்ளுபடி, பாட புத்தகங்கள், சீரூடை உள்ளிட்டவை இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க, அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.தொழிலாளர் நலன் சார்ந்த பல திட்டங்களை அறிவிப்பதன் மூலம் மட்டுமே, வரவிருக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.