புதுடில்லி: ஒரு பக்கம், ‘கொரோனா’ வைரஸ், மற்றொரு பக்கம், முழு ஊரடங்கு என, நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவைப்படும் நாடுகளுக்கு, ‘சப்ளை’ செய்ய, ஜி – 20 நாடுகள் முன்வந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு நாடுகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுக்கான விமான சேவை உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், ஏற்றுமதி, இறக்குமதியும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பை தடுக்க, பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயல்படும் முயற்சியை, பிரதமர், நரேந்திர மோடி எடுத்துள்ளார். முதலில், ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடன், மோடி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவருடைய ஆலோசனையின்படி, ஜி – 20 எனப்படும், மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. ஜி – 20 அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் உள்பட, 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
‘வீடியோ கான்பரன்ஸ்’
ஜி – 20 நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர்கள் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று (மார்ச் 31) நடந்தது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக, கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஜி – 20 நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தேவை அதிகம் உள்ளது.
எந்தெந்த நாடுகளுக்கு உடனடியாக தேவையோ, அவற்றுக்கு அவற்றை சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படை லாப நோக்கமில்லாமல், அனைவரும் இணைந்து, சர்வதேச அளவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சமாளிப்போம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் வெளிப்படையாக, நேர்மையாக, பாரபட்சமில்லாமல், சந்தையை மற்றவர்களுக்கு திறந்து விடுவோம். வான் வழியாக, கடல் வழியாக மற்றும் சாலை வழியாக பொருட்களை பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர்கள் பேச்சு
இதற்கிடையே, ஜி – 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், நேற்று ஆலோசனை நடத்தினர். வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, ஏற்கனவே, இந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள், ஒருமுறை ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.