கொரோனாவை ஒழிக்க பன்றி காய்ச்சலில் இருந்து பாடம் கற்று வியூகம் வகுத்துள்ளோம்: ஐ.சி.எம்.ஆர். தகவல்

Spread the love

பன்றி காய்ச்சலில் இருந்து பாடம் கற்று, கொரோனாவை ஒழிக்க வியூகம் வகுத்துள்ளோம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் உயரிய சுகாதார ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

10 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2009-ம் ஆண்டு பன்றி காய்ச்சல் தாக்கியது. மூலக்கூறு பகுப்பாய்வு கட்டமைப்பு பற்றாக்குறையால் பொது சுகாதாரத்துறை சீர்குலைந்தது.

நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுவதை பார்த்து செய்வதறியாமல் திகைத்தது. அந்த வைரசை ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. மூலக்கூறு வைரலாஜி பரிசோதனைதான் ஒரே வழிமுறையாக இருந்தது. ஆனால், அந்த வசதி, புனே, டெல்லி ஆகிய ஊர்களில் மட்டுமே இருந்தது.

அந்த நிகழ்வு, எங்கள் கண்ணை திறந்தது. பரிசோதனை திறனில் உள்ள குறைபாடுகளை கவனத்தில் கொண்டு பாடம் கற்றோம். அதன் அடிப்படையில், கொரோனாவுக்கு எதிராக நுண்ணறிவு பரிசோதனை வியூகத்தை வகுத்தோம்.

நோயாளிகளை அடையாளம் கண்டறிவது, பரிசோதிப்பது, சிகிச்சை அளிப்பது, நோய் தாக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க சர்வதேச விமான நிலையங்கள் அருகே பரிசோதனை மையங்கள் அமைப்பது ஆகியவை இந்த வியூகத்தில் அடங்கும்.

பன்றி காய்ச்சல் தாக்கியபோது இருந்த நிலைமை போல் இல்லாமல், கொரோனா தலை காட்டியபோது, சுகாதாரத்துறை உடனடியாக பரிசோதனை கட்டமைப்புகளை விரைவுபடுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம், இந்தியாவில் 13 பரிசோதனை மையங்கள் இருந்தன. கடந்த மார்ச் 24-ந் தேதி 123 பரிசோதனை மையங்களாக அதிகரித்தது. தற்போது, இந்த எண்ணிக்கை 610 ஆக அதிகரித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம். நமது தினசரி பரிசோதனை திறன், ஒரு லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதை 2 லட்சமாக உயர்த்தும் முயற்சி நடந்து வருகிறது. நவீன எந்திரங்கள் உதவியால் பரிசோதனை நடத்தப்படுகிறது.

அருணாசலபிரதேசம், நாகாலாந்து, சிக்கிம், லடாக், கோவா, அந்தமான் போன்ற எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளிலும் பரிசோதனை மையங்களை அமைத்துள்ளோம்.

அதுபோல், பரிசோதனை கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை அதிகரித்துள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page