கொரோனாவால் அதிக பாதிப்பு: உலகில் 10-வது இடத்தில் இந்தியா

Spread the love

நாடு முழுவதும் 1,38,845 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதை தொடர்ந்து, உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாகி வந்த கொரோனா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 1 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியது.

இந்தியாவிலும் தனது பரவல் திறனை அதிகரித்து கொரோனா பலரையும் பாதிக்கச் செய்துவருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 6,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுவே இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும்.

இதனால் நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868-ல் இருந்து 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 10-வது இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தை நோக்கி செல்கிறது. 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் 2-வது இடத்தில் இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள ரஷியாவில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது. அடுத்தடுத்த இடங்களில் முறையே ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.

9-வது இடத்தில் உள்ள துருக்கியில் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது. 11-வது இடத்தில் இருக்கும் ஈரானில் பாதிப்பு 1 லட்சத்து 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் புதிதாக 154 பேர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 57,721 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 77,103 பேர் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 50,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு கொரோனா 1,635 பேரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக உள்ளது. புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பலி எண்ணிக்கை 858 ஆக இருக்கிறது.

டெல்லியில் 13,418 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கிய கொரோனா 261 பேரின் உயிரையும் காவு வாங்கி உள்ளது. ராஜஸ்தானில் பாதிப்பு 7,028 ஆகவும், பலி 163 ஆகவும் இருக்கிறது. அதிக உயிரிழப்பை சந்தித்த (290 பேர் சாவு) மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் மத்தியபிரதேசத்தில் 6,665 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அங்கு 161 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்காளத்தில் பாதிப்பு 3,667 ஆகவும் பலி 272 ஆகவும் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு 3 ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிக்கை 100-க்கு கீழேயும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page