பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா? – கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார்

Spread the love

பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானி காரணமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விமான சேவை உள்பட அனைத்து விதமான போக்குவரத்துகளும் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த வாரம் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த பாகிஸ்தான் அரசு உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து ஊரடங்கால் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சிக்கியிருந்த மக்கள் விமானங்கள் மூலம் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கினர்.

அந்த வகையில் கடந்த வெள்ளைக்கிழமை லாகூரில் இருந்து பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ) நிறுவனத்தின் பிகே 8303 என்ற விமானம் கராச்சிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 91 பயணிகளும், விமானி உள்பட 8 ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 97 பேரும் பலியான நிலையில், 2 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்பட்டது.

எனினும் இந்த விபத்து பற்றி விரிவான விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் கீழ் 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை பாகிஸ்தான் அரசு நியமித்தது.

இந்த குழுவினர் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த குழு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானம் பறந்த உயரம் மற்றும் வேகம் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை (ஏ.டி.சி) விமானிக்கு 3 முறை எச்சரிக்கை விடுத்ததாகவும், ஆனால் விமானி அதனை புறக்கணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிகே 8303 விமானம் கராச்சி விமான நிலையத்தில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு முன்னாள் இருந்த போது, விமானம் 7 ஆயிரம் அடி உயரத்துக்கு பதிலாக 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தது.

இதுபற்றி ஏ.டி.சி. விமானிக்கு முதல் எச்சரிக்கை விடுத்தது. அதற்கு விமானி எந்த குழப்பமும் இல்லையென பதிலளித்துள்ளார். பின்னர் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது விமானம் 3 ஆயிரம் அடி உயரத்துக்கு பதில் 7 ஆயிரம் உயரத்தில் பறந்துள்ளது.

இதுபற்றி ஏ.டி.சி. 2-வது முறையாக விமானிக்கு எச்சரிக்கை விடுத்தது. அப்போதும் விமானி நிலைமை தனது கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் இருந்தபோதும் விமானம் அதிக உயரத்தில் பறந்ததால் 3-வது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் விமானியோ எந்த பிரச்சினையும் இல்லை தரையிறங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவர் 3 முறை விமானத்தை தரையிறக்க முயற்சித்துள்ளார்.

இதில் 3 முறை விமானத்தின் என்ஜின் தரையுடன் உரசியதில் எரிபொருள் தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே விமானம் விபத்துக்குள்ளானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் இந்த விசாரணை அறிக்கை விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாகத்தான் விபத்து நேரிட்டதா? அல்லது விமானியின் தவறால் விபத்து நடந்ததா? என்பதை கண்டறிய் அடுத்த கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page