கொரோனா வராமல் தற்காத்துக்கொள்வது எப்படி? – வீடு, வீடாக கையேடு வழங்க தமிழக அரசு திட்டம்

Spread the love

கொரோனா வைரஸ் நோய் பாதுகாப்பு மற்றும் அறிகுறி, தற்காப்பு குறித்து தமிழக அரசு பொதுமக்களுக்கு வீடு, வீடாக கையேடு வழங்க உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை,

கொரோனா நோய் வேகமாக பரவுவதை தடுக்கவும், தற்காத்துக் கொள்ளவும் கொரோனா வைரஸ் கோவிட்-19 தொடர்பாக, அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மடிப்பேடு ஒன்று வடிவமைத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அது பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள் என்ன, பரிசோதனை முறை மற்றும் மையங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரித்தல் போன்ற அனைத்து தகவல்களும் படங்களுடன் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையேடு பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் இதனை அதிக எண்ணிக்கையில் அச்சடித்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள மக்கள்தொகை அதிகமாக உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடுகள்தோறும் வினியோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:-

கொரோனா வைரஸ் என்றால் என்ன?. இதன் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத்திணறல் மேலும் உடல்சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வு தன்மை இழப்பு. இருமல் மற்றும் தும்மல் வரும்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒருவருக்கு வரும் தொற்று ஒரு மாதத்தில் 40 பேருக்கு பரவும்.

இதை தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ளவேண்டும். கண், மூக்கு, வாய் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் கலந்து கொள்வதையும் அறவே தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிவதோடு, ஒருவருக்கொருவர் கூடிபேசுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சமூக இடைவெளியான 3 அடியை கடைப்பிடிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், மோர், இளநீர் போன்றவை அருந்தலாம். நீராவி பிடிக்கலாம்.

மீதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். உங்கள் இருப்பிடத்திலேயே தினமும் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும்; ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்கவும்.

சுக்கு, திப்பிலி, ஆடதோடா போன்ற 15 மூலிகைகள் கொண்ட கபசுர குடிநீர் அருந்தலாம்.

நாள்பட்ட நோய் உள்ளவர்கள், வயதானோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வெளியே போகாமல் தனியாக இருக்க வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கையேட்டை வீடு, வீடாக வினியோகம் செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழில் அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page