அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பி உள்ளனர்.
நியூயார்க்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் திடீரென ஊரடங்கை அறிவித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தையும் ரத்து செய்தன. அதனால், வேலை, சுற்றுலா மற்றும் மருத்துவத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இவ்வாறு பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.
இந்தியாவும் ‘வந்தே பாரத்’ என்ற திட்டம் மூலம் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து முதற்கட்டமாக பல்வேறு விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 2-ம் கட்டமாக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் இருந்து தலா 2 விமானங்களும், வாஷிங்டனில் இருந்து ஒரு விமானமும் என மொத்தம் 7 ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதல் விமானம் நியூயார்க் ஜே.எப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 329 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நேற்றுமுன்தினம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்துள்ளது.