வெளிமாநில தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம்: சுப்ரீம் கோர்ட்டு வருத்தம்

Spread the love

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

வேலை இல்லாததாலும், பஸ், ரெயில் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப்பட்டதாலும், அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1-ந் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘ஷர்மிக்’ சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.

இந்த ரெயில்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே ஏராளமான தொழிலாளர்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக தங்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்ல தொடங்கினார்கள். பலர் சைக்கிளிலும், லாரிகளிலும் செல்ல தொடங்கினர். சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்ட பிறகும்கூட ஏராளமானோர் நடந்து செல்கிறார்கள்.

இப்படி சென்ற தொழிலாளர்களில் பலர் விபத்துகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்து உள்ளன.

இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலை குறித்து நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து உள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் அன்றாடம் வரும் செய்திகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெகு தூரத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவும் சைக்கிளிலும் செல்லும் துயரமான நிலையை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றன.

இந்த தொழிலாளர்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில், அந்த பகுதியைச் சேர்ந்த மாநில அரசு நிர்வாகங்களால் குடிநீர் மற்றும் உணவு வழங்கப்படுவது இல்லை என்றும் புகார்கள் எழுந்து உள்ளன.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மிகவும் அவசியம் ஆகும்.

புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றி சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடம் இருந்து இந்த கோர்ட்டுக்கு கடிதங்களும், மனுக்களும் வந்தவண்ணம் உள்ளன. இந்த தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் ரயில் நிலையங்களிலும் மாநில எல்லைகளிலும் சிக்கித் தவிக்கும் துயரம் இன்றும் தொடருகிறது. இவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் இலவசமாக செய்து கொடுக்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசுகளும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுத்து இருந்தாலும் அவற்றில் சில குறைபாடுகள் உள்ளன.

எனவே, இந்த பிரச்சினையின் அவசரதன்மையை கருத்தில் கொண்டு மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் இது தொடர்பாக தங்கள் பதில்களை அறிக்கையாக 28-ந் தேதிக்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு 28-ந் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவி செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரலை கேட்டுக் கொள்கிறோம். அவர், இந்த பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க இருக்கும் நடவடிக்கைகள் பற்றி கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வருவார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page