கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு

Spread the love

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜெனீவா,

உலக நாடுகளை எல்லாம் உலுக்கி எடுத்து வருகிற கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிப்பதும் ஆராய்ச்சியளவில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு இந்தியாவில் மலேரியா காய்ச்சல் நிவாரணத்துக்கு பயன்படுத்தக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் நல்ல பலன் தருகிறது, வைரஸ் அளவை குறைக்கிறது என தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து இந்த மாத்திரைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்தன.

இதற்கிடையே இந்த மாத்திரைகளை தருகிறபோது உயிரிழப்பு அதிகரிக்கிறது, இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் ஆய்வுத்தகவல்கள் வெளி வந்தன.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து, இந்த மாத்திரைகள் குறித்து நல்ல தகவல்களும் வெளிவந்துள்ளன, நானும் இந்த மாத்திரைகளை கொரோனா தடுப்புக்காக பயன்படுத்துகிறேன் என அறிவித்தார். தனக்கு இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி ‘தி லேன்சட்’ மருத்துவ பத்திரிகை, கொரோனா வைரஸ் தொற்று பாதித்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மாத்திரைகளை கொடுத்ததின் விளைவுகளை ஆராய்ந்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவை வெளியிட்டது.

இந்த ஆய்வில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தனியாகவும், மேக்ரோலைடு மாத்திரைகளுடன் சேர்த்தும் எடுத்துக் கொண்ட நோயாளிகளின் இறப்புவீதம் அதிகளவில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 96 ஆயிரம் கொரோனா நோயாளிகள், ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 15 ஆயிரம் பேருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தனியாகவோ, ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளுடனோ தரப்பட்டுள்ளது. இதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்களில் இறப்புவீதம் 18 சதவீதம், குளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களில் இறப்பு வீதம் 16.4 சதவீதம் என தெரிய வந்தது. (இவ்விரு மாத்திரைகளும் மலேரியா சிகிச்சையில் பயன்படுத்தக்கூடியவைதான்)

இவ்விரண்டு மாத்திரைகளில் ஒன்றை ஆன்டிபயாடிக் மாத்திரைகளுடன் தந்து சோதித்தபோது இறப்புவீதம் இன்னும் அதிகமாக இருந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தியவர்கள், கொரோனா வைரஸ் சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர்.

இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தருகிறபோது அதிகளவில் இறப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளதால், இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்தி சோதிப்பதை நிறுத்தி உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page