ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் – அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

Spread the love

மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டதால், ஜூன் 1-ந் தேதியில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மீன்பிடி விசைப்படகுகள், எந்திரம் பொருத்திய மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் ஆகிய அனைத்து மீன்பிடி படகுகளின் மீன்பிடி தொழிலும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

மீன்பிடி துறைமுகங்கள், மீன்பிடி இறங்குதளங்கள் மற்றும் அனைத்து கரையோர மீன்பிடி இறங்குதளங்களிலும் கொரோனா நோய்பரவலை தடுப்பதற்கும் அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பாரம்பரிய மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளில் பணிபுரியும் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கடந்த மார்ச் 20-ந் தேதியிட்ட ஆணையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ந் தேதி வரையிலான 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையிலான 61 நாட்களுக்கும் விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடைவிதித்து ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகளின் மீன்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, ஊரடங்கின் காரணமாக விசைப்படகுகள் தொழிலில் ஈடுபடாத காலத்தை, மீன்பிடி தடைக்காலமாக கணக்கிட்டு, அதற்கு ஏற்றபடி தடைக்காலத்தை மாற்றி அறிவிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை தனது மே 25-ந் தேதியிட்ட ஆணையில், தற்போது அமல்படுத்தப்படும் ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31-ந் தேதி வரையிலான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31-ந் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.

இதனால், கொரோனா நோய் கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ந் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page