தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 பேரை அனுமதிக்க வேண்டும் – அமைச்சரிடம் ஆர்.கே.செல்வமணி, குஷ்பு வலியுறுத்தல்

Spread the love

தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு 50 பேரை அனுமதிக்கவேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேரில் சந்தித்து ஆர்.கே.செல்வமணி, குஷ்பு உள்பட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள்.

அப்போது, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்ததற்கு கடம்பூர் ராஜூவுக்கு, அவர்கள் நன்றி தெரிவித்தனர். சின்னத்திரை படப்பிடிப்பின்போது அதிகபட்சமாக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியினை தளர்த்தி அதிகபட்சமாக 50 பேர் எண்ணிக்கையிலானவர்களுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத்தருமாறு சுஜாதா விஜயகுமார், குஷ்பு, ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கோரிக்கை மனுவினை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொடுத்தனர்.

அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்காக முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.5 கோடி நிதியில் முதல் தவணையாக ரூ.1 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.1 கோடி நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனவும், மீதமுள்ள ரூ.50 லட்சத்தை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை விடுத்தனர்.

உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்கான நிதியினை விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பெப்சி துணைத்தலைவரும், இசையமைப்பாளருமான தினா, நடிகர் மனோபாலா, திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் லியாகத் அலிகான், சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகி வெங்கட் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் ஆர்.கே.செல்வமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பொதுவாகவே சிறிய தொலைக்காட்சி தொடர் என்றாலே 100 பேர் பணிபுரிவார்கள். பெரிய தொடர் என்றால் 200 பேர் வரை பணியாற்றுவார்கள். சின்னத்திரை நடிகர்-நடிகைகளே 20 பேர் வந்துவிடுவார்கள். இதுதவிர கேமராமேன், இதர உதவியாளர்கள், கலைஞர்கள் என குறைந்தபட்சம் 60 பேர் வரை இருந்தால் தான் படப்பிடிப்புகளை தொடங்கமுடியும். சின்னத்திரை படப்பிடிப்புகளில் மொத்தம் 24 யூனிட்டுகள் உண்டு. எனவே குறைந்தபட்சம் 50 பேருடன் படப்பிடிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்” என்றார்.

நடிகை குஷ்பு கூறுகையில், “அரசு அனுமதி அளித்தபோதிலும் இன்னும் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. குறைந்தது 50 பேரையாவது அனுமதிக்கவேண்டும். ஒரே நேரத்திலேயே அனைத்து விதமான படப்பிடிப்புகளையும் நடத்திக்கொள்ளும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு என ஒரு நாள் ஒதுக்கப்படும். அந்த நாளில் தான் எல்லா படப்பிடிப்புகள் தொடங்கும். வேறு வேறு நாட்களில் படப்பிடிப்புகளை யாராலும் தொடங்கவே முடியாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். யார் முதலில் படப்பிடிப்பு தொடங்குகிறார்கள்? என்பது குறித்து யோசிக்கவோ, போட்டிப்போடவோ இது நேரம் கிடையாது. இதை தயாரிப்பாளர்களும் உணர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page