சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் 4 மேல் தளங்களை கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசு பயன்படுத்த அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
சென்னை அமைந்தகரையில் உள்ள ‘பில்ராத்‘ ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டியுள்ள 5 தளங்களுக்கு ‘சீல்‘ வைக்கவும், அதற்கு வழங்கப்பட்ட மின்இணைப்பை துண்டித்து, அவற்றை இடிக்கவும் சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு மே 9-ந் தேதி உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக பில்ராத் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த கட்டிடம் தொடர்பாக சில விளக்கங்களை பெற வேண்டி இருப்பதாக கூறி, 5 தளங்களை இடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், சர்ச்சைக்குரிய இந்த தளங்களை விசாரணை முடியும் வரை ஆஸ்பத்திரி நிர்வாகம் பயன்படுத்தக்கூடாது என்று கூறியதோடு, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு இந்த ஆஸ்பத்திரியின் நான்கு மேல் தளங்களை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதுதொடர்பாக ஆஸ்பத்திரியின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்களை தொடர்பு கொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இந்த தளங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதால், இடிப்பதற்கு எதிரான தடையை தற்போதைக்கு நீட்டிப்பதாகவும், ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த தளங்களை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தனர்