கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் தனிமைபடுத்தலில் 23 லட்சம் பேர்; அடுத்த கட்ட ஊரடங்கு பிரதமர் அலுவலகம் ஆலோசனை

Spread the love

கொரோனா பாதிப்பால நாடு முழுவதும் 23 லட்சம்பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் ஊரடங்கை மேலும் நீட்டிக்க செய்யும் மறுஆய்வு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஜூன் 1 முதல் மூலோபாயத்தை தீர்மானிக்க உதவும் தரவுகளை அலசி வருகிறது. மாநிலங்களின் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில், மத்திய அரசு கடந்த முறை இரண்டு வார கால ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்தபோது கணிசமான தளர்வுகளை அளித்தது.

இந்த முறை இறுதி முடிவு மாநிலங்களுக்கு விடப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில், உள்நாட்டு விமான சேவையும் மீண்டும் இயங்க தொடங்கியது. தேர்ந்தெடுக்கப்பட்ட பல நகரங்களுக்கு விமான சேவைகள் தொடங்கியது.

இந்த முறை, கொரோனா பாதிப்புகள் மற்றும் தனிமைப்படுத்தலின் அடிப்படையிலும் கடந்த 12 நாட்களில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது இது கவலையை அளித்து உள்ளது.

இதை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைத் தொடரலாமா அல்லது ஜூன் 1 முதல் எவ்வாறு அதனை தொடரலாம், இது குறித்து இறுதி ஆலோசனை மாநிலங்களுடன் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் திணிக்கப்பட்டிருப்பது சுகாதாரம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது, ஆனால் இது ஒரு மாநில விஷயமாகும்.

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான அதன் மூலோபாயம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடமிருந்து வரும் விமர்சனங்கள் குறித்து அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. முதலமைச்சர்கள் கூட அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இது கடந்த 64 நாட்களில் பல சந்தர்ப்பங்களில் தனது நிலைப்பாட்டை மாற்ற மத்திய அரசை தள்ளியுள்ளது.

சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களின் படி மே 26 வரை, நாட்டில் 1,47,284 கொரோனா வைரஸ் பாதிப்புகள் உள்ளன இருப்பினும், பெரிய கவலை என்னவென்றால், வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் உள்ள 22,81,250 பேர் உள்ளனர்.

மே 14 அன்று, 77,152 பாதிப்புகள் மற்றும் 11,95,645 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தனர். தற்போது 12 நாட்களில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்கு அதிகாரிகள் அதிக சோதனைகள் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் ஊரடங்கு தளர்வுகளும் காரணம் என்று கூறுகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டம், சர்வதேச வெளியேற்றங்கள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்குவது ஆகியவை உயரவுக்கான காரணம் என்று ஒரு அதிகாரி கூறினார். மாவட்டங்களுக்கு இடையேயான நடமாட்டம் மற்றும் ரெயில்களின் இயக்கம் ஆகியவற்றை மேற்கொண்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்வைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

தொடர்ச்சியாக அதிகபட்ச பாதிப்புகளை கொண்ட மராட்டியத்தில் தற்போது 6.02 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 12 நாட்களுக்கு முன்பு, இந்த எண்ணிக்கை 2.9 லட்சத்துக்கு மேல் இருந்தது.

குஜராத்தில் இப்போது 4.42 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இது 12 நாட்களுக்கு முன்பு 2 லட்சமாக இருந்தது. உத்தரபிரதேசத்தில் 3.6 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு உள்ளனர். மே 14 அன்று இந்த எண்ணிக்கை 2.3 லட்சமாக இருந்தது.

ஏராளமான புலம்பெயர்ந்தோர் திரும்பி வந்த மாநிலங்கள் கொரோனா வைரஸிலும், தனிமைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்களிலும் ஒரு உயரவை காட்டியுள்ளன.

பீகாரில் ஏராளமான புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இப்போது 2.1 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இது 12 நாட்களுக்கு முன்பு 1.1 லட்சமாக இருந்தது.

சத்தீஸ்கார் மாநிலத்தில் ஏராளமான புலம்பெயர்ந்தோர் திரும்பி வந்த மற்றொரு மாநிலம் – இப்போது 1.8 லட்சம் தனிமைப்படுத்தலைக் கொண்டுள்ளது, மே 14 அன்று 43,000 ஆக இருந்தது.

ஒடிசாவில் 1.1 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனுடன் தொடர்புடைய எண்ணிக்கை மே 14 அன்று 72,765 ஆக இருந்தது.

ஜார்க்கண்டின் எழுச்சியும் வியக்க தக்க முறையில் உள்ளது,12 நாட்களுக்கு முன்பு 15 ஆயிரமாக இருந்த தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 88,000 க்கும் அதிகமாக உள்ளது.

இவை அனைத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான இயக்கம் மற்றும் புலம்பெயர்ந்தோர் இயக்கம் பதிவு செய்யப்பட்ட மாநிலங்கள்” என்று ஒரு அதிகாரி உறுதிப்படுத்தினார். 35 லட்சம் புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரெயில்களிலும் பேருந்துகளிலும் வீடு திரும்பியுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page