“டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை” – முதல்முறையாக அடையாளப்படுத்தியது, ‘டுவிட்டர்’

Spread the love

டிரம்பின் ‘டுவிட்’கள் தவறாக வழி நடத்தக்கூடியவை என்று முதல்முறையாக ‘டுவிட்டர்’ அடையாளப்படுத்தியது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட 2 டுவிட்கள் மக்களை தவறாக வழி நடத்தக்கூடியவை என்று முதல்முறையாக ‘டுவிட்டர்’ நிறுவனம் அடையாளப்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தினந்தோறும் ‘டுவிட்டர்‘ சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களை விமர்சிப்பதற்கும் உபயோகப்படுத்துகிறார். அவரை டுவிட்டரில் 8 கோடிபேர் பின்பற்றி வருகிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அதில், டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிப்பதில் தங்களுக்கு தயக்கம் இருப்பதாக ஒரு கருத்துக்கணிப்பில் 60 சதவீத வாக்காளர்கள் தெரிவித்தனர்.

எனவே, மெயில்-இன் (தபால்) வாக்கு வசதியை பெரும்பாலானோருக்கு அளிப்பதற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா, மிச்சிகன் மாகாண கவர்னர்கள், வாக்காளர்களின் வீட்டுக்கு தபால் வாக்குச்சீட்டுகளை அனுப்பி வருகிறார்கள்.

இதை விமர்சித்து டிரம்ப் நேற்று முன்தினம் 2 ‘டுவிட்‘களை பதிவிட்டார். அவற்றில் அவர் கூறியிருந்ததாவது:-

தபால் வாக்குச்சீட்டுகள், மோசடிக்கு வழிவகுக்கும். சட்டவிரோதமாக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, மோசடியாக கையெழுத்து போடப்படலாம். ஏனென்றால், கலிபோர்னியா கவர்னர் லட்சக்கணக்கானோருக்கு தபால் வாக்குச்சீட்டுகளை அனுப்பி வருகிறார் என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையே, இந்த 2 டுவிட்களும் ‘பொய்யானவை‘ என்ற அர்த்தம் அளிக்கும்வகையில், அவற்றுக்கு கீழே “தபால் வாக்குச்சீட்டு குறித்த உண்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்“ என்று ஒரு எச்சரிக்கை குறிப்பை ‘டுவிட்டர்‘ இணைத்துள்ளது.

இந்த டுவிட்கள், மக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்று ‘டுவிட்டர்‘ செய்தித்தொடர்பாளர் ட்ரன்டன் கென்னடி கூறினார்.

டிரம்பின் ‘டுவிட்‘களை இதுபோன்று ‘டுவிட்டர்‘ அடையாளப்படுத்துவது இதுவே முதல்முறை ஆகும். தவறான தகவல்களை அடையாளப்படுத்தும் முறையை சமீபத்தில் அந்நிறுவனம் கொண்டு வந்தது.

ஆனால், டுவிட்டரின் நடவடிக்கைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில், “டுவிட்டர், தற்போது ஜனாதிபதி தேர்தலில் தலையிடுகிறது. சி.என்.என்., அமேசான் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை சரிபார்த்ததன் அடிப்படையில், எனது டுவிட்களை பொய் என்று கூறியுள்ளது.

டுவிட்டர், பேச்சுரிமையை நசுக்குகிறது. ஜனாதிபதி என்ற முறையில், இதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

டிரம்பின் பிரசார நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page