கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Spread the love

சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை முறையிலான அக்குபஞ்சர் மூலமாக சிகிச்சை அளிப்பது தொடர்பான மனுதாரர் மனு மீது நான்கு வாரங்களில் பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் ‘சீனாவில் தோன்றிய வைத்திய முறையான அக்குபஞ்சர் மூலமாக 1979 ம்ஆண்டு 112 வகையான நோய்களை குணப்படுத்த முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசும் கடந்த 2003 ஆண்டு முதல் அக்குபஞ்சர் வைத்திய முறையை அங்கீகரித்து வருகிறது. கொரோனா நோயை குணப்படுத்த சித்தா ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறது.

கொரோனாவுக்கு அலோபதி மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் அக்பஞ்சர் மூலமாக சீனாவில் அந்நோய் கட்டுப்படுத்தப்பட்டதாக உலக சுகாதார நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது. சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 85.2 சதவீதம் பேருக்கு அதாவது 60,107 பேருக்கு அலோபதி மருத்துவத்துடன் அக்குபஞ்சர் சிகிச்சையும் சேர்த்து வழங்கப்பட்டது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா நோயாளிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும்

அக்குபஞ்சர் சிகிச்சை மூலமாக உடலில் ‘3 எம்.எல்.ஆல்பா இம்மினோ குளோபின்’ உடலில் உற்பத்தி செய்யப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. அக்குபஞ்சர் சிகிச்சை செய்யும் 1 லட்சம் மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர். எனவே ஆய்வு மேற்கொண்டு அக்குபஞ்சர் சிகிச்சையை இந்தியாவில் மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மனுதாரர் 3 வாரங்களில் மத்திய அரசுக்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதை மத்திய ஆயுஷ் அமைச்சகம் 4 வாரங்களில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page