டோக்கியோ:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை சமாளிக்க இதுவரை, 2.2 டிரில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது ஜப்பான் அரசு.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை, 16,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில், 13,973 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியுள்ளனர்; 869 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவல் கட்டுப்பட்டாலும், உள்நாட்டு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாகவுள்ள ஜப்பானிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்க, 117 ஜப்பான் யென் (1.1 டிரில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள தொகுப்புதவி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், ஜப்பானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இதுவரை அரசு அறிவித்துள்ள தொகுப்புதவி திட்டங்களின் மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
‘உலக நாடு ஒன்றால் அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பொருளாதார தொகுப்புதவி திட்டம் இதுதான். இதுபோன்ற பொருளாதார மீட்பு நடவடிக்கைகள், கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகளிருந்து மீண்டுவர ஒரு நாட்டு மக்களுக்கு மிகவும் பயன்படும்’ என, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.