நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. எஸ் மற்றும் பி குளோபல் நிறுவனம் இதை மதிப்பீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25 முதல் வருகிற 31-ந் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக தொழில்கள் நிறுவனங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. இதனால், வேலையின்மை காணப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதனை தெளிவுப்படுத்தும் விதமாக இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 40 சதவிகிதம் வீழ்ச்சியை காணும் என்று எஸ்.பி.ஐ. ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கை 2021-ம் நிதியாண்டில் 6.8 சதவிகிதம் சுருங்கலாம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் அதாவது மார்ச் 31-ந் தேதி வரை இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. எஸ் மற்றும் பி குளோபல் நிறுவனம் இதை மதிப்பீடு செய்துள்ளது.
இதுவரை 1951-ம் நிதியாண்டில் இருந்து 5 முறை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1957-1958-ம் நிதியாண்டில் 0.4 சதவிகிதம் 1965-1966 வரை 2.6 சதவிகிதமும் 1966-1967-ல் 0.1 சதவிகிதமும் 1972-1973-ல் 0.6 சதவிகிதமும் 1977-1980-ல் 5.2 சதவிகிதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தற்போது 2020-21 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதம் வீழ்ச்சியடையும் என்று அந்த குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
வளர்ச்சிக்கு பெரிய பாதிப்பு, நிரந்தர பொருளாதார இழப்பு மற்றும் பொருளாதார முழுவதும் இருப்பு நிலையில் சரிவு ஆகிய காரணங்களால், பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்திய ரூபாய்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில 10 சதவிகிதம் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதில் 1.2 சதவிகிதம் நேரடி தூண்டுதல் நடவடிக்கையை கொண்டுள்ளது. மீதியுள்ள 8.8 சதவிகிதம் பணப்புழக்க ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் கடன் உத்தரவாதங்கள் ஆகியவை வளர்ச்சியை நேரடியாக ஆதரிக்காது.
அதே நேரத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. 6.5 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.