கோவையில், 2 கோவில்கள் முன்பு இறைச்சி வீசிய என்ஜினீயரை சம்பவம் நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை வைசியாள் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. அந்த கோவிலையொட்டி ஒரு தனியார் கட்டிடம் உள்ளது. அதற்கு அருகில் ராகவேந்திரா சுவாமிகள் கோவில் உள்ளது. குறுகலான வீதியில் அமைந்துள்ள அந்த கோவில்களுக்கு அருகில் பழக்கடைகள், நகை பட்டறைகள் அதிகம் உள்ளன. அங்கு மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்றுக்காலை 10.30 மணியளவில் ராகவேந்திர சுவாமிகள் கோவில் வாசலையொட்டி பேபி (வயது 65)என்ற பெண் பூ விற்றுக் கொண்டிருந்தார். அப்போது கோவில் அருகில் ஒரு ஆசாமி மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கையில் ஒரு பையோடு வந்தார். அந்த கோவிலின் வெளிப்புறக் கதவு திறந்திருந்தது. உள் கதவு பூட்டப்பட்டிருந்தது. பூக்கடை அருகே வந்த அந்த ஆசாமி பூ வாங்காமல் வெளிப்புறக்கதவு திறந்திருந்த கோவில் முன்பு ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து விட்டு சென்றார்.
அதன்பின்னர் அந்த ஆசாமி நடந்து சென்று அருகில் இருந்த வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு மற்றொரு பிளாஸ்டிக் பையை வைத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்து வந்தார். ராகவேந்திர சுவாமி கோவில் முன்பு அந்த ஆசாமி வைத்த பையிலிருந்து நாற்றம் வீசியதால் அது என்ன என்று பார்ப்பதற்காக பேபி எழுந்து சென்று அதை எடுத்து பார்த்தார். அதில் இறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
அதற்குள் அந்த ஆசாமி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். இது பற்றி அக்கம், பக்கத்தில் இருந்தவர்களிடம் பேபி கூறினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த இறைச்சியை போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். அங்கு அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பெரிய கடைவீதி போலீசில் தனித் தனியாக புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பா.ஜனதா மற்றும் இந்துமுன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறைச்சி வீசப்பட்ட 2 கோவில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் இறைச்சி வீசியவர் அடையாளம் தெரிந்தது. அவர் பெயர் ஹரி(வயது 48) என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். நேற்றுக்காலை 10.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசாமியை 6 மணி நேரத்தில் அதாவது 4.30 மணியளவில் கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.