வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

Spread the love

வரலாற்று முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தியா கடந்த ஓராண்டு காலத்தில் வேகமான முன்னேற்றம் கண்டுள்ளதாக மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

இந்தியாவில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக 2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவை உலக அளவில் முன்னோடி நாடாக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கியவையாக உள்ளன.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வது நமது உயர் முன்னுரிமையாக இருக்கிறது. ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதற்காக வியாபாரி கல்யாண் வாரியத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட, இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றும் முடிவுகளின் பட்டியல் இந்தக் கடிதத்தில் எழுத முடியாத அளவுக்கு நீளமானதாக இருக்கும். ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடைய அரசு 24 மணி நேரமும் முழு வேகத்துடன் உழைத்து, இந்த முடிவுகளை முன்னெடுத்துச் சென்று அமல்படுத்தியுள்ளது என்பதை நான் கூறியே ஆக வேண்டும்.

உலகை உலுக்கி வரும் கொரோனா நம் நாட்டையும் பிடித்துள்ளது. விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் தொடங்கி, கொரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களைப் கவுரவிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நிகழ்ச்சிகள், மக்கள் ஊரடங்கு அல்லது தேசிய அளவிலான முடக்கநிலை காலத்தில் விதிமுறைகளை உறுதியாகக் கடைபிடிப்பது போன்றவை உன்னத பாரதம் என்ற நிலையை எட்டுவதற்கான உத்தரவாதமாக உள்ளன.

இந்தியா உள்ளிட்ட, பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் எப்படி மீட்சி பெறும் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வருகிறது. பொருளாதார மீட்டுருவாக்கத்திலும் நாம் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

நாம் தற்சார்பாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. நமது சொந்தத் திறன்களின் அடிப்படையில் நமது பாதையில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு தற்சார்பு இந்தியா என்ற ஒரே வழிதான் இருக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்த இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைத் தரும் காலகட்டமாக இது இருக்கும்.

வியர்வை, கடின உழைப்பு, நமது தொழிலாளர்களின் திறமையுடன் கூடிய இந்திய மண், இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையிலான உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து, தற்சார்பை நோக்கி பயணம் செய்வதாக இருக்கும். நான் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். என்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்கு எந்தக் குறையும் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page