புதுடில்லி:
ஆரோக்கிய சேது செயலி முற்றிலும் பாதுகாப்பானது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மத்திய அரசு, கொரொனா பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளின் சந்தேகங்களை தீர்க்கவும், சிகிச்சையை விரைவுபடுத்தவும், ஆரோக்கிய சேது செயலியை வெளியிட்டது. இந்த செயலில், தனி நபர் தகவல்களை, பிறருக்கு தாரைவார்த்துவிடும் ஆபத்து இருப்பதாக, மென்பொருள் வல்லுனர்கள் சுட்டிக்காட்டினர். இந்த விமர்சனத்தை போக்கவும், குடிமக்களின் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலி மென்பொருளை, ‘ஓப்பன் சோர்ஸ்’ மென்பொருளாக சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இந்த செயலியின் பாதுகாப்பு குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கொரோனா நேர்மறையான எவருடனும் நீங்கள் தொடர்பு கொண்டால், ஆரோக்கிய சேது மிகவும் நியாயமான முறையில் கண்டறிய உதவுகிறது. இது முற்றிலும் தனியுரிமை சார்ந்தது மற்றும் முற்றிலும் பாதுகாப்பானது.
நாம் மிகவும் சவாலான காலங்களை சந்திக்கிறோம். மனிதன் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல முயன்றான், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் செய்தான், ஆனால் ஒரு வைரஸ் வந்து உலகம் முழுவதையும் தடம் புரளச் செய்துள்ளதை நம்ப முடியுமா? இப்போது வரை தடுப்பூசி இல்லை மற்றும் பொருளாதாரம் உலகளவில் சிதைந்துள்ளது. இது புதிய உலகம், இது எவ்வளவு காலம் செல்லும் எனத் தெரியவில்லை. கொரோனாவுக்கு பிந்தைய உலகம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.