சென்னை:
தமிழகத்தில் நீலகிரி, கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் (locust) நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக சில வெட்டுக்கிளிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அது சாதாரண வெட்டுக்கிளிகள் என கூறினர். இருப்பினும் இது புது வகையாகும்.
இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முதல் பல இடங்களில் எருக்கன் செடிகள், வாழை, பப்பாளி ஆகியவற்றில், இலைகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்தன. விவசாயிகள் அதை பார்த்தபோது புதிய வகை வெட்டுக்கிளிகள் என்பது தெரியவந்தது. இதனால் பீதியடைந்து, மாவட்ட கலெக்டருக்கு தகவல்.
கொடுத்தனர்.இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்துணை இணை இயக்குநர் ராஜசேகர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர் ராஜசேகர் கூறுகையில், இங்கு காணப்படுவது, பாலைவன லோகஸ்ட் வகை வெட்டுக்கிளிகள் அல்ல. உள்ளூர் வெட்டுக்கிளிகள்தான். இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆனால், இது புதிய தோற்றத்தில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு குறித்த தகவல்கள் வருவதால், தடுப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து, வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், இன்று மதியம் 3 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே, வெட்டுக்கிளிகள் குறித்து, விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. விமானிகளுக்கு முன்னே உள்ள கண்ணாடிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்தால், முன்னால் என்ன இருக்கிறது என்பதை பார்க்க பிடிக்காமல் போய்விடும் என அந்த எச்சரிக்கை கூறுகிறது. விமானத்தில் காற்று உள்ளே புகுவதற்கு உள்ள துவாரங்களின் மூலம் அதிக எண்ணிக்கையில் வெட்டுக்கிளிகள் உள்ளே சென்றால், அதன் காரணமாக விமானத்தை இயக்குவதில் சிரமம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது