பீஜிங்: சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் புதிதாக 1541 பேருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாட்டு மக்களை பீதியடைய செய்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் 81 ஆயிரத்து 554 பேர் பாதிக்கப்பட்டனர்; அதில் 3312 பேர் உயிரிழந்தனர். 76 ஆயிரத்து 238 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். இப்படி மோசமான பாதிப்புகளை சந்தித்த சீனா பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது. இதையடுத்து இங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பியது.
இந்நிலையில் சீன தேச சுகாதாரத்துறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை மக்களை பீதியடைய செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இந்த வைரசால் 1541 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர். அதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 205 பேரும் உள்ளடங்குவர். இவர்கள் யாருக்கும் வைரஸ் பாதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இதைத்தவிர வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேருக்கும் உள்நாட்டில் ஒருவருக்கும் அறிகுறிகளுடன் கூடிய பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக எண்ணிய நிலையில் சீன அரசின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களை மட்டும் அல்லாமல் இதர நாடுகளையும் கதிகலங்க செய்துள்ளது.