கொரோனா பாதிப்பு- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் பங்கேற்றார். சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.
கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவால்கள், மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.