தேவையான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது சென்னைக்கு இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் பஞ்சம் இருக்காது

Spread the love

தேவையான அளவுக்கு நீர் இருப்பு இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் சென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் என்றாலே தண்ணீர் பிரச்சினை தலை விரித்தாட தொடங்கி விடும். காலிக்குடங்களுடன் மக்கள் தண்ணீரை தேடி அலையும் காட்சியையும் காண முடியும். இந்த ஆண்டு கொரோனா தாக்கமும் சேர்ந்து கொண்டதால் பிரச்சினையை சமாளிக்க முடியுமா என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் கொரோனா தாக்கம் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் தேவையில் வேட்டு வைக்கவில்லை. இதற்கு காரணம் பெரிய மால்கள், ஓட்டல்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால் குடிநீர் தேவை பெருமளவில் குறைக்கப்பட்டு இருந்தது.

பொதுவாக சென்னை மாநகர பகுதிகளின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுகிறது. சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு டி.எம்.சி. வரை தண்ணீர் தேவைப்படுகிறது. இதுதவிர வீராணம் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி ஆகிய இடங்களில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது.

நடப்பாண்டு பருவ மழை ஓரளவு கைகொடுத்ததால் ஏரிகளில் போதுமான தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த சீசனில் 7.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஆந்திர மாநில அரசு 500 மில்லியன் கன அடியை திறக்க சம்மதம் தெரிவித்து தற்போது நிமிடத்துக்கு 380 கன அடி நீர் வீதம் திறந்து விட்டு வருகிறது.

தற்போது கையிருக்கும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநில அரசு திறந்து விட்டுள்ள தண்ணீர் மூலம் இந்த ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். அதேநேரத்தில் அடுத்த ஆண்டு பருவ மழையை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். சென்னை மாநகருக்கு தற்போது 700 கன அடி வீதம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நிலத்தடி நீரும் நன்றாக இருக்கிறது.

சராசரியாக 2 ஆயிரத்து 500 லாரி தண்ணீர் நடைகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுப்பார்கள். ஆனால் தற்போது 1,200 நடைகள் மட்டுமே தேவை இருந்து வருகிறது. தண்ணீர் தேவை பாதியாக குறைந்து விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page