ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா – காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Spread the love

ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

சென்னை,

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில்துறை சார்பில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது. இந்த பூங்கா 10 ஏக்கரில் 5.57 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் 21 அடுக்கு மாடி கட்டிடமாக அமைய உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாய பூங்கா என பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்படுகிறது.

தென் சென்னையில் டைடல் பூங்கா உருவாக்கிய வளர்ச்சியை போன்று சென்னையின் வடக்கு பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இந்த திட்டம் அமையும். இதனை சுற்றி பல தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமார் 25 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 24 மாதங்களில் இந்த திட்டம் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சென்னையின் வடபகுதியில் உள்ள இடங்களில் சமூக, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் இந்த திட்டம் அமையும். புதுதொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நவீன நுட்பங்களை உருவாக்கிடும் புத்தாக்க நிறுவனங்கள் என நாளைய உலகை நோக்கி தமிழ்நாட்டை அழைத்து செல்லும் தொலைநோக்குத் திட்டமான இந்த திட்டத்துக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, டைடல் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக முதல்-அமைச்சரிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் ‘கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்’ என்ற திட்டத்தினை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அவரவர் இருப்பிடத்தில் இருந்தே இணையதளம் மூலம் விரைவாக ரூ.25 லட்சம் வரை 6 சதவீத வட்டி மானியத்துடன் பிணை சொத்து இன்றி கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் கடன் தொகைக்கான காசோலையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், தலைமை செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் காகர்லா உஷா, டைடல் நிறுவன மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தொழில் துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page