இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை
சென்னையில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையின் பொறுப்பு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் இன்று காலை கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், சிஎம்டிஏ அதிகாரி கார்த்திகேயன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னைக்கான மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான், அதிகளவில் சோதனை செய்து வருகிறோம்.
தமிழகத்தில் வென்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது. வென்டிலேட்டர்கள் தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது.
இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு . தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன.
ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் முயற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனாவை பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது என கூறினார்.