சென்னை: அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே வந்தால், 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் உள்ள தொழிலாளர்களை சந்தித்தேன். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. உணவு,உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.
அத்யாவசிய பொருட்களை கொண்டு வருவதற்கு தடையில்லை. அவை, நமக்கு வேறு மாநிலங்களில் இருந்து வர வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் இயக்கப்படாதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்யாவசிய பொருள் கொண்டு செல்வதற்கு மாநிலங்கள் தடை விதிக்கக்கூடாது என பிரதமர் கூறியுள்ளதால், பிரச்னை தீரும்.
சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல், சிலர் விளையாட்டு தனமாக டூவிலரிலும், கார்களிலும் பயணிக்கின்றனர். அரசு கேட்டு கொள்வதெலலாம் நோயின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை உணர வேண்டும். இந்த வைரசுக்கு எந்த மருந்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
144 தடை உத்தரவு என்பது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அல்ல. மக்களை காக்கவே பிறப்பிக்கப்பட்டுள்ளது மக்களை காக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்யாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரலாம் என்றாலும், தினசரி வர வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை வெளியே வரும் போது, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். மக்கள் தான் இதனை கடைபிடிக்க வேண்டும். இது அவர்களின் கடமை. எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பது கிடையாது.இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும். மக்களுக்கு அரசு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கும்.மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க தவறினால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும். தடையை மீறி வெளியே வந்தல் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும். அத்யாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்கள், ரேசன் கடைகளில் இந்த மாத இறுதி வரை வழங்கப்படும். வீடுகளுக்கு சென்று டோக்கன் கொடுக்கப்படும். அப்போதே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அரசு அங்கீகரித்த பத்திரிகையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.