மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன: ‘ நிசர்கா ‘ புயல் மராட்டிய மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தது – வானிலை ஆய்வு மையம்

Spread the love

அரபிக் கடலில் உருவான ‘ நிசர்கா ‘ புயல் மராட்டிய மாநிலம் அலிபாக் அருகே கரையை கடந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புதுடெல்லி,

இந்தியாவில் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் பெரும்பாலான மாநிலங்கள் மழைப்பொழிவை பெறுகின்றன.

முதலில் கேரளாவில் தொடங்கும் இந்த மழை பின்னர் படிப்படியாக கர்நாடகம், மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்யத் தொடங்கும்.

இந்த ஆண்டு வழக்கம் போல் கேரளாவில் ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அங்கு பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டது.

இந்த புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது.

‘நிசர்கா’ தீவிர புயலாக மாறி வடக்கு மராட்டியம் அலிபாக் அருகே கரையை கடந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் நிசர்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். ‘நிசர்கா’ புயலால் மின் கம்பங்கள், மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் தேசிய பேரிடர் (என்.டி.ஆர்.எஃப்) குழு சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர்.

மும்பைக்கு அருகே கரையை கடந்ததால் சேதம் ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இரவு 7 மணி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page