எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: “தேர்வை தள்ளி வைப்பது மாணவர்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

Spread the love

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. தேர்வை தள்ளி வைப்பது மாணவர்கள் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மதுரை,

தென்காசியை சேர்ந்த கனகராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வருகிற 15-ந் தேதி தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான மனநிலையில் இருக்க மாட்டார்கள். மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்கு முன்பாக பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் கலந்து பேசி முடிவு செய்யவில்லை. எனவே மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “சி.பி.எஸ்.இ.யை பொறுத்தவரை டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே சில சிரமங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் அறிந்துதான் அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கும். தேர்வை தள்ளிப்போடுவது பள்ளி மாணவர்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட இயலாது” என்றனர்.

பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page