ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

ஜெனீவா
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.
ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.
சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரன்ஸ் ,அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி ஆய்வுகள் செய்துவருகின்றன.
அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தினமும் சாப்பிடுகிறேன் , உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார் டிரம்ப்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுப்பதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்த நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையை குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மே 25 ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுக்கு சாத்தியமான சிகிச்சையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒற்றுமை மருத்துவ பரிசோதனைகளை “தற்காலிகமாக” நிறுத்தியதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
சோதனைகளில் பங்கேற்க 35 நாடுகளில் 3,500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு
உள்ளனர்
இந்த நிலையில் “கிடைக்கக்கூடிய இறப்பு தரவுகளின் அடிப்படையில், குழு உறுப்பினர்கள் சோதனை நெறிமுறையை மாற்ற எந்த காரணங்களும் இல்லை என்று பரிந்துரைத்தனர்.”
“நிர்வாகக் குழு இந்த பரிந்துரையைப் பெற்றதை தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்பட ஒற்றுமை சோதனைகள் அனைத்தையும் தொடர ஒப்புதல் அளித்தது.
கொரோனா இறப்பு விகிதத் தகவலை ஆய்வு செய்ததை வைத்து பார்த்ததன் அடிப்படையில், உலக சுகாதார தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக, சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடனும், தீர்வுகள் மற்றும் ஆதரவுடனும் உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக செயல்படும் எனவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.