திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 10 முதல் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.

திருப்பதி.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் கோவிலில் 6 கால பூஜைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியது.

இதுகுறித்து திருமலை அன்னமய்ய பவனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி வரும் ஜூன் 8ம் தேதி முதல் ஏழுமலையான் தரிசனம் திருமலையில் தொடங்கப்பட உள்ளது. ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களும், ஜூன் 10ம் தேதி திருமலையில் வசிக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. அதன்பின் ஜூன் 11ம் தேதி முதல் இதர மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனம் தொடங்கப்பட உள்ளது.

திருமலையில் தினசரி 6 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. காலை 6.30 மணிமுதல் மாலை 7 மணிவரை ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு மணி நேரம் வி.ஐ.பி தரிசனமும், அதற்கு பின் சர்வ தரிசனமும் தொடங்கப்பட உள்ளது. 3 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் மூலமாகவும், அலிபிரியில் உள்ள டிக்கெட் கவுண்டர் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி தரிசன டிக்கெட் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page