சீனாவின் உகான் நகரில் கடைசி 3 நோயாளிகளும் ‘டிஸ்சார்ஜ்’ ஆனதால், கொரோனா பாதிப்பு இல்லாத ஊராக உகான் அகி உள்ளது.

பீஜிங்,
உலகிலேயே முதல்முதலில் கொரோனா தோன்றிய சீனாவி்ன் ஹுபெய் மாகாணம் உகான் நகரில், 3 நோயாளிகள் மட்டும் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு அடுத்தடுத்து நடத்தப்பட்ட 2 பரிசோதனைகளில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது. உடல் வெப்பநிலை இயல்பு நிலையை அடைந்தது. அறிகுறிகள் மறைந்தன. இதையடுத்து, நேற்று அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதனால், உகான் நகரில் மட்டுமின்றி, அந்நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்திலும் கொரோனா நோயாளிகள் யாருமே இல்லை. உகான் நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில், யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, மற்ற பகுதிகளில் நேற்று அறிகுறிகளுடன் 5 பேருக்கும், அறிகுறி இல்லாமல் 3 பேருக்கும் கொரோனா தாக்கி இருக்கிறது.