இங்கிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளி மந்திரிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் வர்த்தக மந்திரி பதவி வகிப்பவர், அலோக் சர்மா (வயது 52). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 3-ந் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரு நிறுவனங்கள் திவால் மற்றும் ஆளுமை மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது திடீரென அவரது உடல்நிலை பாதித்தது. அவருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. அவர் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். வீட்டுக்கு திரும்பி அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு கொரேனா தொற்று இல்லை என்பது நேற்று முன்தினம் உறுதியானது. இது அவருக்கு பெருத்த நிம்மதியை தந்துள்ளது.இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “கடந்த 24 மணி நேரமாக கனிவான வாழ்த்து செய்திகளை அனுப்பிய அனைவருக்கும் இதயம்கனிந்த நன்றி. நாடாளுமன்றத்தில் எனக்கு ஆதரவு அளித்து உதவிய அதிகாரிகள், சபாநாயகர் ஆகியோருக்கும் நன்றி. இப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவு என் கைக்கு வந்துள்ளது. இது எதிர்மறையாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.