அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடக்கம்: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

Spread the love

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி நிறைவடையும் என்று அமர்நாத் யாத்திரை விவகாரக் குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அமர்நாத் புனித யாத்திரையை வரும் ஜூன் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்த ஜம்முவில் உள்ள அமர்நாத் கோயில் நிர்வாக கமிட்டி முடிவு செய்திருந்தது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுவதாக இருந்த அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக வெளியான அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றது. மேலும் யாத்திரை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் யாத்திரை விவகாரக் குழுவான ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலைய வாரிய (எஸ்ஏஎஸ்பி) அதிகாரிகள் இன்று அறிக்கை வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை என மொத்தம் 15 நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பயண நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.

சாதுக்களைத் தவிர்த்து 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த முறை யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். யாத்திரையில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தபிறகு அதற்குரிய சான்தறிதழை வழங்கிட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் யாத்திரை செல்லும் வழியிலும் சோதனை நடத்தப்படும். அப்போது கொரோனா அறிகுறிகள் இருந்தால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். சாதுக்களைத் தவிர்த்து அனைத்து பக்தர்களும் யாத்திரைக்கான ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முறையில் அமர்நாத் குகைக் கோவிலில் காலை, மாலை இரு வேளையும் ஆரத்தி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆரத்தி நடக்கும் 15 நாட்களும் நேரலையில் பக்தர்களுக்கு ஒளிபரப்பப்படும்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உள்ளூர் தொழிலாளர்கள் வேலைக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் குகைக் கோவிலுக்குச் செல்லும் பாதைகளைப் பராமரித்தலில் இடர்ப்பாடுகள் நிலவுகின்றன. ஆதலால், கந்தர்பால் மாவட்டத்தின் பால்தால் முகாமிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் யாத்திரை தொடங்கும்.

இந்த முறை எந்த பக்தரும் காஷ்மீரின் பாஹல்காம் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை தொடங்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அனைத்து பக்தர்களும் காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள பால்தால் பாதை வழியாகவே அனுமதிக்கப்படுவார்கள். 15 நாட்கள் நடைபெறும் யாத்திரை ஆகஸ்ட் 3-ம் தேதி ஷ்ரவண் பூர்ணிமா அன்று நிறைவடையும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page