தமிழகத்தில் சமூக பரவல் இல்லை: சுகாதார செயலர்

Spread the love

சென்னை: கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை என சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கண்காணிப்பின் கீழ் 90,415 பேர் உள்ளனர். வீடு முடிந்து 5080 பேர் திரும்பியுள்ளனர். 3,684 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று வரை 309 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று 102 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில், 1,580 பேர் அனமதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டில்லி சென்றவர்கள். மற்றொருவர் அமெரிக்கா சென்று வந்துள்ளார். மற்றொருவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். டில்லி சென்று வந்தவர்களில் 303 பேருக்கு கொரோனா இல்லை.

தமிழக அரசிடம் போதுமான அளவு மாஸ்க், மருத்துவ உபகரணங்கள் உள்ளது. ஒருவருக்கு பாதிப்பு என அறிந்த உடனேயே, அனைத்து துறைகளும் இணைந்து முழு வீச்சில் செயல்படுகிறோம். பாதிப்பு அதிகரிக்க, அதிகரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளது. சமூக பரவலாக மாறவில்லை. இதனால், அனைவரும் சமூக விலகல், தனியாக இருத்தல் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கப்பட கூடியவர்கள், கவனமுடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புபவர்கள் பெறலாம். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அங்கு வரலாம். தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டாலும் ஒருவர் தான் உயிரிழந்துள்ளார். மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரவில் கூட இல்லை. இதனால், அறிகுறி இருப்பவர்கள், தாமாக முன்வந்தால், அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு பீலா ராஜேஷ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page