கொரோனாவிலிருந்து மீண்டு வருவது கடினம் என்று சிங்கப்பூர் துணை பிரதமர் கவலை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர்,
கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் வீரியமோ உலகையே கதிகலங்க வைக்கிறது. அதுதான் கொரோனா வைரஸ்.
டிசம்பர் 1-ந் தேதி சீனாவின் உகான் நகரத்தில் தனது கைவரிசையை தொடங்கிய இந்த வைரஸ் இப்போது உலகின் 200 நாடுகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியுள்ள நிலையில் ஒரு சில நாடுகளில் நிலைமை கைமீறிப் போகும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் தற்போது கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் துணைப்பிரதமர் ஹெங் ஸ்வீ கீட், கொரோனா குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வருவது கடினம் என்றும் கொரனோ பாதிப்பில் இருந்து மீள இன்னும் பல வருடங்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 37 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் இன்று மட்டும் அந்நாட்டில் 344 பேர் கொரோனாவினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் பாதிப்பில் இருந்து மக்களை மீட்க சிங்கப்பூர் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் தினந்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.