ஹஜ் புனிதப்பயணம் இந்த ஆண்டு சாத்தியம் இல்லை? – செலுத்திய தொகையை திருப்பித்தர முடிவு

Spread the love

ஹஜ் புனிதப்பயணம் இந்த ஆண்டு சாத்தியம் இல்லாததால், செலுத்திய தொகையை திருப்பித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணத்துக்காக கட்டணம் செலுத்தியவர்களுக்கு திருப்பித்தர இந்திய ஹஜ் கமிட்டி முடிவு எடுத்துள்ளது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று, வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதாகும். ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த ஆண்டு அடுத்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அந்த புனிதப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 2 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித தலங்களுக்கு ஹஜ் புனிதப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இதற்கான கட்டணத்தை அவர்கள் பலரும் ஹஜ் கமிட்டியிடம் செலுத்தி இருந்தனர்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று 2 லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், சவுதி அரேபியாவில் 95 ஆயிரத்துக்கு அதிகமானோருக்கும் பரவி இருக்கிறது. இந்தியாவில் 6,650 பேரும், சவுதி அரேபியாவில் சுமார் 650 பேரும் பலியாகியும் உள்ளனர்.

இப்படி கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஹஜ் புனிதப்பயணத்தை இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

இதையொட்டி இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி மக்சூத் அகமது கான் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணத்துக்கான ஆயத்த பணிகளை செய்வதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சவுதி அதிகாரிகள் இது தொடர்பாக எந்த மேலதிக தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இங்கு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதில் நிலவி வருகிற நிச்சயமற்ற தன்மை குறித்து பல தரப்பினரும் விசாரித்துள்ளனர். கவலை தெரிவித்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணத்தை ரத்து செய்ய விரும்புவோருக்கு, இதுவரை செலுத்திய 100 சதவீத தொகையும் எந்த விதமான பிடித்தமும் இன்றி திருப்பித்தரப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி மக்சூத் அகமது கான் கூறி உள்ளார்.

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரேபிய அரசுடன் இந்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது நினைவுகூரத்தக்கது.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்கிற நிலையில், சில நாடுகள் ஏற்கனவே இந்த புனிதப்பயணத்தை நடப்பு ஆண்டில் மேற்கொள்வதை ரத்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்களை கொண்டுள்ள இந்தோனோசியாவிலும் இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page