கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை! – உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன?

Spread the love

கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சமீப காலமாக அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது! – இப்படித்தான்நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

இந்தியாவில் இந்த தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. 6,600-க்கும் மேற்பட்டோர் எவ்வளவோ தீவிர சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும் பலனின்றி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். இன்னும் நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தினமும் நாடு முழுவதும் சர்வ சாதாரணமாக 5 ஆயிரம், 6 ஆயிரம் என்று தொற்றுக்கு புதிது, புதிதாக ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கை முதன்முதலாக பிறப்பித்த மார்ச் மாதத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 இலக்கத்தை தொடாமல் இருந்தது. இப்போதோ 6 இலக்கத்துக்கு போய் விட்டது. தமிழ்நாட்டில் தினந்தோறும் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை 3 இலக்க எண்ணிக்கையில் இருந்து 4 இலக்க எண்ணிக்கைக்கு போய் விட்டது. ஆனால் இப்படியெல்லாம் கொரோனா பரவிக்கொண்டிருந்தாலும்கூட இந்தியாவில் கொரோனோ வைரஸ் அதிவேகமாக பரவவில்லை என்ற உண்மையை உலக சுகாதார நிறுவனம் போட்டு உடைத்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் அவசர கால திட்டத்தின் தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான் இதுபற்றி ஜெனீவாவில் நேற்று முன்தினம் நிருபர்கள் மத்தியில் பேசும்போது, “ தெற்கு ஆசியாவில், இந்தியாவில் மட்டுமல்லாது, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலும் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவவில்லை. ஆனால் அதற்கான ஆபத்து எப்போதும் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா வைரஸ் தொற்று சமூகங்களில் காலடி எடுத்து வைப்பதால் அது எந்த நேரத்திலும் வேகம் எடுக்கலாம். இதை நாங்கள் பல அமைப்புகளில் கண்டிருக்கிறோம்” எனவும் அவர் எச்சரித்தார்.

“கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் இந்தியாவை அவர் பாராட்டத்தவறவில்லை. இந்தியாவில எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நிச்சயமாக பரவலைக்குறைப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தின. அதே நேரத்தில் இந்தியாவில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து இருக்கும் நிலையில் ஆபத்து எப்போதும் இருக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவை பொறுத்தமட்டில் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, மக்கள் தொகை அடர்த்தி பெரிய பிரச்சினைகள்தான். பல தொழிலாளர்களுக்கு தினமும் வேலைக்கு போவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாக உள்ள தமிழ்ப்பெண் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் (இவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மகள்) இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி எடுத்துரைத்தார். அப்போது அவர் இப்படி சொன்னார்….

“இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. இந்த மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் மிதமாகத்தான் இருக்கிறது. உண்மையில் நாம் வளர்ச்சி வீதத்தையும், பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை இரட்டிப்பு அடைய ஆகும் காலத்தையும் கண்காணிக்க வேண்டும். அப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

இந்தியா மிகப்பெரிய நாடு. மக்கள் தொகை மிகவும் அடர்த்தியாகக்கொண்ட நகரங்களை கொண்ட நாடு. பல்வேறு மாநிலங்களிலும் சுகாதார அமைப்பு மாறுபட்டிருக்கிறது. இவை அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு சவால்களாக அமைகின்றன.

பொது முடக்கத்தை விலக்கிக்கொண்டதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய அளவில் மக்கள் நடத்தையில் மாறுபாடு வேண்டும் என்று விரும்பினால், மக்களை சில விஷயங்களை செய்ய சொல்வதற்கான காரணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பல நகர்ப்புறங்களில் தனி மனித இடைவெளியை பராமரிப்பது சாத்தியமற்ற ஒன்றாகத்தான் இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் முக கவசங்களை அணிய வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. அவர்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசங்களை அணிவது முக்கியம்.

தனி மனித இடைவெளியை அலுவலக அமைப்பில், பொது போக்குவரத்து சாதனங்களில், கல்வி நிறுவனங்களில் பின்பற்ற முடியாதபோது பல மாநிலங்கள் எல்லாவற்றையும் திறந்து விட்டு விட எண்ணுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும், அமைப்பும், தொழில் துறையும், பிற துறைகளும் தங்கள் முன் வைக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். அதன்பின்னர் அனுமதிக்கலாம்” என்கிறார் டாக்டர் சவுமியா சுவாமிநாதன்.

இதையெல்லாம் பார்க்கிறபோது, கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இன்னும் அதிதீவிர நிலையை அடைய வில்லை என்பது எப்படி உண்மையோ, அதைத் தக்க வைப்பது நம் கையில்தான் உள்ளது என்பதுவும் உண்மைதான்!

அதற்கு கை சுத்தம், முக கவசம், தனிமனித இடைவெளி பின்பற்றல் ஆகிய மூன்றையும் தாரக மந்திரங்களாக கொண்டால் கொரோனா வைரஸ் சவாலை நாம் வெல்ல முடியும். தயாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page