போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணி: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்டா விவசாயிகள் நன்றி

Spread the love

போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியால் டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடிக்கு பணிக்கு விவசாயிகள் தயாராகி உள்ளனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களுடைய நன்றியை அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை நீர்மிகை மாநிலமாக உருவாக்குவதை இலக்காக கொண்டு, விவசாயிகளின் நலனுக்காக நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2016-ம் ஆண்டு முதல் நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அவரது வழிகாட்டுதலுடன் ஏரி, குளம், குட்டை முதல் நீண்ட நெடிய கால்வாய், நீர் தேக்கங்கள் என நீர் ஆதார அமைப்பை முற்றிலும் சீரமைக்கவும், மழை நீர் துளியும் வீணாகாமல் சேமிக்கவும், தூர்வாருதல் மற்றும் செப்பனிடுதல் போன்ற பணிகள் கடந்த ஆண்டு சுமார் 2 ஆயிரத்து 629.85 கிலோ மீட்டர் தூரத்துக்கு செய்து முடிக்கப்பட்டது.

சுமார் ரூ.60 கோடியே 95 லட்சம் செலவில் 281 பணிகளை செப்பனிட 635 எந்திரங்களை கொண்டு கடந்த ஆண்டு களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு கடைமடை வரை தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டன. இது டெல்டா விவசாயிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி மொத்தம் 3 ஆயிரத்து 457.15 கி.மீ. தூர்வாருவதற்கான 392 பணிகள் போர்க்கால அடிப்படையில் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. சிறப்பு தூர்வாரும் பணிகளை கண்காணிக்கவும், துரிதப்படுத்தி முடிக்கவும் 7 மாவட்டத்துக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கண்காணித்து பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.

மேலும் 7 மாவட்டங்களின் கலெக்டர்கள், நீர்வள ஆதாரத்துறையின் தலைமைப்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என 173 பொறியாளர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல 809 எந்திரங்களும் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மட்டும் 2.90 லட்சம் ஏக்கர் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் மூலம் கடந்த ஆண்டை விட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி 1 லட்சம் டன் கூடுதலாக உற்பத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கடைமடை வரை தண்ணீர் செல்ல 25 நாட்கள் ஆகும். ஆனால் தற்போது சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தினால் 10 நாட்களில் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்லும். ஆகவே டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணிகளை செய்வதற்கு தயார் நிலையில் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டம் வைரவன் கோவில் வாய்க்கால் பாசனதாரர் எம்.கணேசன் கூறியதாவது:-

வைரவன் கோவில் வாய்க்கால் கடந்த 8 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வராமல் எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை. பிழைக்க வழி இன்றி கஷ்டப்பட்டோம். இந்த வாய்க்கால் மூலம் 500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இப்போது எடப்பாடி பழனிசாமி தூர்வாரும் திட்டத்தை கொண்டுவந்ததால் பணி சிறப்பாக முடிந்துள்ளது. மேட்டூர் அணை திறந்ததும் கடைமடை பகுதியான எங்களுக்கு தண்ணீர் வேகமாக வந்து சேரும். குறுவை சாகுபடி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். முதல்-அமைச்சருக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை மாவட்டம் கல்யாண ஒடை பாசனதாரர் சங்கத்தலைவர் எம்.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

பல ஆண்டுகளாக காவிரி தண்ணீரை இப்பகுதி விவசாயிகள் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது 670 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் கல்யாண ஓடை தூர்வாரப்பட்டுள்ளது. எனவே நாங்கள் குறுவை சாகுபடிக்கு தயாராக உள்ளோம். எங்களை வாழ வைத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

பழைய பள்ளி ஏரி கால்வாய் (வடக்கல்) பாசனதாரர் அழகர் கூறிதாவது:-
கடந்த ஆண்டு விக்கிரம ஆறு தூர்வாரும் திட்டத்தின் கீழ் சிறப்பாக தூர்வாரப்பட்டு கடைமடை வரை பாசன நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால் அனைத்து விவசாயிகளும் மிகுந்த பயனடைந்தனர். அதுபோல இந்த ஆண்டும் பழைய பள்ளி ஏரி கால்வாயும் தூர்வாரப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் சுமார் 850 ஏக்கர் பாசன வசதி பெறும் இப்பகுதி விவசாயிகள் பெறும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இனி நாங்கள் அதிக பயன்பெறுவோம். கடைமடை விவசாயிகளான எங்களுக்கும் வாழ வழிகாட்டிய விவசாயிகளின் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page